Vannappalagai 24X7
நன்னன் எனும் தமிழ் மன்னன் சிவாஜி கணேசன் விரும்பிய நடிகர்
Wednesday, 06 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
           பேராசிரியர் மா.நன்னன்.
    நினைவுநாள் இன்று (07. 11. 2017)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கட்டுரையாளர்:
வாங்கனூர் அ. மோகனன் 
பேராசிரியர் #மா_நன்னன் 
(30 சூலை 1924 - 7 நவம்பர் 2017) 
இவர் ஒரு தமிழறிஞர், எழுத்தாளர்,
பேச்சாளர், பெரியார் பற்றாளர்.

இளமையும் வாழ்வும்:
இவர் #விருத்தாசலத்தை அடுத்த #காவனூர் எனும் ஊரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் #திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால், தன் பெயரை ‘நன்னன்’ என மாற்றிக் கொண்டார். #அண்ணாமலைப்_பல்கலைக்கழகத்தில்_புலவர் பட்டமும், #சென்னைப்பல்கலைக்கழகத்தில் #முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்தார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் #தமிழ்_வளர்ச்சித்_துறையின் #இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர் கல்வி வாரியத் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். 

#சென்னைத்_தொலைக்காட்சியில் 17 ஆண்டுகள் #எண்ணும்_எழுத்தும் என்ற தலைப்பில் கற்பித்தார். பல பாடநூல்களையும் துணைப்பாடநூல்களையும் எழுதிய நன்னன், 1990-2010 காலகட்டத்தில் சுமார் #எழுபது_நூல்களை எழுதினார். பெரியார் கொள்கைகளின் மீது பற்று கொண்டவர். கடவுள் மறுப்பு, பகுத்தறிவுக்கொள்கை, கலப்புத் திருமணம்,எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். சீர்திருத்தத் திருமணங்களை நேரம் பார்க்காமலும் தாலி கட்டாமலும் விடுமுறை நாள்களிலும் நடத்தவேண்டும் என்று கூறியதுடன் அத்தகு திருமணங்களை நடத்தியும் வைத்தார். எக்காரணம் கொண்டும் கையூட்டு (இலஞ்சம்) கொடுக்க மறுத்தார். உரிய தொகைக்கு மேல் சிறு அன்பளிப்பு (டிப்ஸ்) என்று தருவதும் கூடாது என்னும் கொள்கை உடையவர். பெரியார் கொள்கைகள் குறித்து பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய “பெரியாரைக் கேளுங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் வகைப்பாட்டில் பரிசு பெற்றது. இவர் #பெரியார்_விருது, #தமிழ்ச்செம்மல்_விருது_திரு_வி_கவிருது போன்ற விருதுகளையும் பெற்றவர்.

குடும்பம்:
இவரது பெற்றோர் பெயர் 
#மீனாட்சி_மாணிக்கம். இவரது வாழ்க்கைத் துணைவி #ந_பார்வதி. இவருக்கு #வேண்மாள்_அவ்வை என்ற மகள்கள்; இவர் மகன் #அண்ணல், மருத்துவப் படிப்பு முடித்து மேலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டே மருத்துவமும் பார்த்து வந்தார். மூட்டு வலிக்கான புதிய மருந்து பற்றிய ஆய்வில் வெற்றி பெற்றிருந்த நிலையில் திடீரென்று இறந்தார். தம் மகன் அண்ணல் பெயரில் #அறக்கட்டளை ஏற்படுத்தி ஆண்டுதோறும் பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி நடத்தி மாணவர்களுக்குப் பரிசும் அவர்களது பள்ளிகளுக்குச் சான்றிதழும் வழங்கி வந்தார்.

போராட்டம்:
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் #வெள்ளையனே_வெளியேறு என்னும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்றபின் #தமிழிசைக்கிளர்ச்சி, #இந்தி_எதிர்ப்புப்_போர் ஆகியவற்றில் கலந்துகொண்டும், தொடர் வண்டி நிலையங்களில் உள்ள பெயர்ப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துக்களை அழித்தும் சிறைசென்றார்.

1942 ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்து பல மேடைகளில் பேசினார். படிப்படியே #பெரியாரியம்_பகுத்தறிவு_சிக்கனவாழ்வு_நல்லதமிழைப்பயன்படுத்துதல்_ஊடகத்துறையில் உள்ள மொழிநடைக் குறைபாடுகள் பற்றிப் பேசலானார்.

தமிழ்ப் பண்ணை:
#மக்கள்_தொலைக்காட்சியில் #அறிவோம்_அன்னைமொழி என்ற தலைப்பில் தமிழைப் பிழையின்றி எழுதவும், வாக்கியங்களை அமைக்கவும் நாள்தோறும் தகவலை வழங்கிவந்தார். நிகழ்ச்சியின் வாசகர்களைத் 
#தமிழ்ப்_பண்ணையார்கள் என்று அழைத்தார். தமிழ்ப்பண்ணை நிகழ்ச்சியில் தினமும் காலை 7.30 முதல் 8 மணி வரை தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் உள்ள நிறை குறைகளையும், குறைகளுக்கான சரியான தீர்வுகளையும் ஆராய்ந்தார்.

நன்னன் எழுதி வெளிவந்த நூல்கள் 
90க்கும் மேற்பட்டவை.
தமிழுக்காகவே வாழ்ந்து மறைந்த
தோழர் தமிழறிஞர் #நன்னன்
அவர்களின் நினைவைப் போற்றிப்
புகழ்வோம்..