Vannappalagai 24X7
ஒன்றுக்குள் ஒன்று தீண்டாமை ஒழிப்பு யார் கையில் ?
Saturday, 16 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

சங்கித்தனமான காவலர்கள்

மேற்கு மண்டலத்தில் உள்ள உடுமலைப் பேட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடந்த / நடந்து கொண்டிருக்கும் சாதீய ஒடுக்கு முறை பற்றிய காணொளி ஒன்று வளை தளங்களில் 
"திராவிட மாடல் அரசு நடைபெற்று வரும் தமிழ் நாட்டில் இப்படியான தீண்டாமைக் கொடுமை நடைபெறுகிறது"- என 7 நிமிடங்களுக்கு  தீவிரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.   

ஒரு மாநில அரசு பட்டியல் இன மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் சலுகைகள் அளிக்க முடியும். சமூக நலத் திட்டங்களை கொண்டு வர முடியும்.  போலவே, தீண்டாமைக்கு எதிராக சட்டம் இயற்ற முடியும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியும். ஆனால், இடைநிலை சாதியினர்கள் தான் மனிதாபிமான அடிப்படையில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். எத்தனை சட்டங்கள் போட்டாலும் மன மாற்றங்கள் தான் சரியான தீர்வாக அமையும்.  

இதே தமிழ் நாட்டில் தான் 95- ஆண்டுகளுக்கு முன்பாக, செங்கல்பட்டு மாநாட்டில் வைத்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் தன்னுடைய சாதிப் பட்டத்தை தூக்கி எறிந்த போது அவரைப் பின் தொடர்ந்து சுயமரியாதை இயக்கத்தினர் தங்களின் சாதிப் பட்டங்களை தூக்கி எறிந்தார்கள். அதற்கு பிறகான ஆண்டுகளில் சாதி மறுப்புத் திருமணங்களும், கலப்புத் திருமணங்களும் அரங்கேறின. அதன் தொடர்ச்சிகள் இன்றளவும் தொடர்கிறது.  

ஆனால், சாதிய சங்கங்கள் அரசியல் கட்சிகளாக உருவெடுத்த பிறகு, வட இந்திய மதவாத கட்சிகள் இங்கு வந்து சாதீய வாதத்தின் பின் ஒளிந்து கொண்டு பிளவுவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றன. 

இந்த சூழலில், பட்டியல் இன மக்கள் மீதான ஒடுக்கு முறைகள் முன்னை விட அதிகரித்து வருகின்றன. இதனை சாதீய வாதங்கள் மேலும் கூர்மை படுத்துகின்றன. ஆனால், ஒட்டு மொத்த பழிகளையும் திராவிட மாடல் அரசின் மீது போட நினைப்பது சங்கித்தனமான வேலை. இந்த வேலையை நடுநிலை நாயகர்களே அதிகமாக செய்து தமது சமூகநீதி பாசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.  ஒரு கணம் நிறுத்தி, நிதானித்து முன்- பின் யோசிக்கும் அளவுக்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.   

இப்படி, வலியச் சென்று, சங்கிகளுக்கு சாமரம் வீசும் சமூக நீதிக் காவலர்களுக்கு, நுண்ணரசியலை கற்றுத் தரப்போவது யார் ?

வண்ணப்பலகை
( 16, நவம்பர், 2024)