உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்த பின் நீராவிக் குளியல் எடுத்த நிலையில் குளியலறைக்குள்ளேயே மரணம் சம்பவித்திருக்கிறது
முதலில் அண்ணாரைப் பிரிந்து வாடும் அவர்தம் தாயார் உள்ளிட்ட அனைத்து சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
இவரது இறப்பில் இருந்து
நமக்கு ஏதேனும் பாடங்கள் இருக்கின்றனவா?
ஆம்.. நிச்சயம் இருக்கின்றன
அவருக்கு இறப்பு மருத்துவ ரீதியாக எவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என்பதைக் கண்டால், இதைப் போன்ற மரணங்களை நம்மால் தடுக்க முடியும் என்று நம்புகிறேன்.
அன்னாரின் இறப்புக்கு முக்கியமான காரணமாக
இதய செயல் முடக்கம் (CARDIAC ARREST)இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.
இதயத்தின் தசைகள் தங்களின் பணியான சுருங்கி விரிவதை நிறுத்திக் கொள்வதே "இதய செயல் முடக்கம்" ஆகும்.
இதயத்தின் தசைகள் துடிப்பதற்கு அவற்றில் நுண்ணிய அளவு மின்சாரக் கடத்தல் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பது அத்தியாவசியத் தேவையாகும்.
இவ்வாறு இதயத்தின் தசைகளில் மின்னோட்டம் முறையாக நிகழ வேண்டுமெனில் நமது உடலின் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சரியான அளவில்
பொட்டாசியம்
மெக்னீசியம்
சோடியம்
கால்சியம் ஆகிய தூது உப்புகள்
பராமரிக்கப்பட வேண்டும்.
இவற்றில் செல்களுக்கு உள்ளே அதிகமாக நிரம்பியிருக்கும் பொட்டாசியமும்
செல்களுக்கு வெளியே அதிகமாக வியாபித்திருக்கும் சோடியமும்
இதயத்தின் தசைகளின் செல்களின் சவ்வுகளினூடே
உள்ளே வெளியே ஆட்டம் ஆடும் போது இதயத்தின் தசைகளில் கரண்ட் பாய்கிறது.
இதனால் தான் தசை சுருங்குகிறது.
நமது உடல் முழுவதும் ரத்தம் பம்ப் செய்யப் படுகிறது.
இந்நிலையில் மேற்சொன்ன நான்கில் இதயத்தின் துடிக்கும் தசைகளுக்கு அதி முக்கியமானது எதுவென்றால்
"பொட்டாசியம்" முறையாகப் பராமரிக்கப்படுவது தான்.
செல்களுக்கு வெளியே இருக்கும்
ரத்த பொட்டாசியம் அளவுகள்
3.5 முதல் 5.0 மில்லிமோல்/லிட்டர் என்ற அளவில் இருப்பது நார்மல்.
இதை விட அதிகமானால்
அதி பொட்டாசியம் நிலை / ஹைப்பர் கேலீமியா
குறைந்தால்
குறை பொட்டாசியம் நிலை /ஹைப்போ கேலீமியா
இதில் இறந்த சகோதரர்
தொடர்ந்து மூன்று மணிநேரங்களுக்கு மேல் ஓய்வின்றி
தசைகளுக்கு கடினமான பளுப் பயிற்சி செய்துள்ளார்.
இதன் காரணமாக
உடலில் இருந்து அதிகமான அளவு நீர்ச்சத்து வெளியேறி இருக்கும்.
அதீத நீர்ச்சத்து குறைபாட்டில்
உடலில் அமிலத்தன்மை ஏற்படும்.
இவ்வாறு உடல் அமிலத்தன்மையில் இருக்கும் போது அதை ஈடு செய்ய
செல்களுக்கு உள்ளே இருக்கும்
பொட்டாசியம் திடீரென செல்களுக்கு வெளியே ரத்தத்தில் துரித நேரத்தில் சேர்ந்து விடும்.
இதனால் ரத்த பொட்டாசியம் அபாயகரமான அளவுகளில் மதகுகளைத் தாண்டி ஏறிவிடும்.
இதன் விளைவாக
இதயத்தின் மின்சாரக் கடத்தலில்
சிக்கல் ஏற்பட்டு இதய செயல் முடக்கம் ஏற்படும்.
கூடவே உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலிமை இழந்து எங்கும் நகர்ந்து போகக் கூட இயலாத அளவு கீழே விழச் செய்து விடும்.
மேலும் அதீத நீர்ச்சத்து இழப்புடன்
கூடவே தசைகள் அனைத்திற்கும் அதீத வேலை கொடுத்ததால்
ரேப்டோமயோலைசிஸ் எனும் தசைச் சிதைவு நோயுடன் கூடவே
நீராவிக் குளியல் எடுத்தமையால்
உடலின் உஷ்ணமும் அதிகரித்திருக்கும்.
இதன் விளைவாக ரத்தத்தில் அதிகமாகிய பொட்டாசியம் அளவுகள் மீண்டும் குறைவதற்கு வாய்ப்பு இல்லாமல் போகவே இதயம் முடக்கநிலையில் இருந்து மீளாமல் இறப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதை எவ்வாறு தடுக்கலாம்?
- உடலுக்கு அதீத பயிற்சி
தசைகளுக்கு அதீத பளு கொடுத்து நீண்ட நேரம் பயிற்சி வழங்குதல் தவறு.
இதனால் அதீத தசைச் சோர்வு ஏற்படும்.
நீரிழப்பு ஏற்படும்.
கூடவே பொட்டாசியம், கால்சியம், சோடியம், மெக்னீசியம்
ஆகிய தாது உப்புகளில் தறிகெட்டுப் போதல்
நிகழ்ந்து "இதய செயல் முடக்கம்" ஏற்படுகிறது.
சரியான இடைவெளி விட்டு சரியான முறையில் நிபுணர்களின் அறிவுறுத்தலுடன் சரியான நேரம் மட்டும் - தினமும் 45 நிமிடங்கள் உடல் பயிற்சி / தசைக்குப் பயிற்சி கொடுப்பது நல்லது.
உடல் பயிற்சிக்கு முன்னும்
உடல் பயிற்சி செய்யும் போதும்
செய்த பின்னும்
நீர் சத்து மற்றும் தாது உப்புகளை பராமரிக்கும் திரவங்களை முறையாக பருக வேண்டும்.
எப்போதும் உடற்பயிற்சி செய்யும் போது தனியாக செய்வது நல்லதல்ல.
நமது உடலுக்கு ஏதேனும் நேரும் போதோ விபத்து நேரும் போதோ உடன் ஒருவர் இருந்தால் நம்மைக் காப்பாற்ற முடியும்.
ஜிம்களில் சிபிஆர் எனப்படும் இதயத்தின் துடிப்பை மீட்டெடுக்கும் துரித முதலுதவியை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும். தானியங்கி வெளிப்புற
டீஃபிப்ரிலேட்டர் கருவிகள் இருப்பின் இதய செயல் முடக்கம் நேரும் போது
மின்சாரம் பாய்ச்சி உயிரைக் காப்பாற்ற முடியும்.
நமக்கான அறிவுரை
எதிலும் அளவுக்கு மிஞ்சினால் அது நஞ்சாகி விடும் உண்மையை நாம் உணர வேண்டும்.
உடல் பயிற்சி செய்வதும்
ஜிம்களுக்குச் செல்வதும்
தசைகளுக்கு வலுசேர்க்கும் உடற்பயிற்சிகளைச் செய்வது மிகவும் நல்லது
ஆயினும் மிகுதியாகச் செய்வது
அது குறித்த போதிய அறிவின்றிச் செய்வது
முறையான பாதுகாப்பின்றிச் செய்வது ஆபத்து.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை