Vannappalagai 24X7
மெய் நிகர் தொழிற் கூடங்கள் கோவை - மீண்டும் ஒரு தொழிற் புரட்சி
Tuesday, 19 Nov 2024 18:30 pm
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

கோவை : 
ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் என்றால் தமிழகத்தை சேர்ந்த அனைவரும் சென்னைக்கு தான் படையெடுப்பார்கள். அதே போல ஜவுளி உற்பத்தி சார்ந்த வேலைவாய்ப்புகள் என்றால் கோயம்புத்தூர் தான் அனைவரின் நினைவுக்கும் வரும். ஆனால் நிலைமை இப்போது மாறிவிட்டது. பெரிய பெரிய ஜவுளி ஆலைகள் மற்றும் பருத்தி ஆலைகளுக்கு பெயர் போன கோயம்புத்தூர் நகரம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஐடி மையமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் சாத்தியமாகியுள்ளது. கோயம்புத்தூரில் தங்கள் நிறுவனங்களை தொடங்குவதற்கு ஐடி நிறுவனங்கள் தயக்கம் காட்டி வந்தன. ஐடி துறைக்கு சம்பந்தப்பட்ட ஆட்கள் கிடைப்பது கடினம், ஐடி அலுவலகங்களுக்கான கட்டமைப்புகள் குறைவு என்பதுதான் காரணமாக சொல்லப்பட்டது

 தற்போது அங்கே பல்வேறு ஐடி சம்பந்தப்பட்ட தொழில்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் வெளியிட்டுள்ள அறிக்கை அடிப்படையில் இந்தியாவிலேயே ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்குவதற்கான சிறந்த நகரங்களில் கோயம்புத்தூர் 13-வது இடத்தில் இருக்கிறது

 கோயம்புத்தூரில் 2020 ஆம் ஆண்டில் வெறும் 271 ஸ்டார்ட் நிறுவனங்கள் தான் இருந்தன அது தற்போது 1350 என அதிகரித்துள்ளது. இவ்வாறு கோயம்புத்தூரில் தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பெரும்பாலானவை ஐடி சேவை சார்ந்த நிறுவனங்கள் தான். கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய கல்வி நிறுவனங்கள் பெருமளவில் ஐடி துறை சார்ந்த படிப்புகளை வழங்கி வருகின்றன. இதனால் அந்த பகுதியிலேயே ஐடி துறை சார்ந்த நிபுணர்கள் பணிக்கு கிடைப்பது அதிகரித்துள்ளது. எனவே தான் பலரும் நம்பிக்கையோடு தங்களுடைய நிறுவனங்களை கோயம்புத்தூரில் நிறுவுகின்றனர்.

 TeamLease Degree Apprenticeship நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரமேஷ் அல்லூரி ரெட்டி கோயம்புத்தூர் போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் சிறந்த திறமையான பணியாளர்கள் கிடைக்கின்றனர் எனக் கூறுகிறார். தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை தவிர்த்து கோயமுத்தூர் போன்ற நகரங்களில் இருந்து தான் 25 சதவீத மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது எனக் கூறுகிறார். அதுமட்டுமின்றி குறைந்த வாழ்க்கை செலவுகள், காற்று மாசு குறைவு ஆகியவை காரணமாக வேறு மாநிலங்களை சேர்ந்த ஐடி நிபுணர்களும் கோயமுத்தூர் வந்து பணிபுரிய விரும்புகின்றனர். ஐடி துறை சார்ந்த நபர்களுக்கு ஏற்ற வகையில் அங்கே ரியல் எஸ்டேட் மற்றும் ஷாப்பிங் மால் உள்ளிட்ட வசதிகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு அரசும் ஐடி பூங்காக்களை நிறுவுகிறது. கடந்த 2005 ஆம் ஆண்டு காக்னிசண்ட் நிறுவனம் முதன்முறையாக தன்னுடைய ஐடி நிறுவனத்தை கோயம்புத்தூரில் நிறுவியது.

தற்போது ஐபிஎம், இன்போசிஸ், டெக் மகேந்திரா ஆகிய நிறுவனங்களை அங்கே செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளன. கோயம்புத்தூரில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி மற்ற நகரங்களான திருச்சி, மதுரை உள்ளிட்ட வற்றுக்கும் ஒரு முன் உதாரணமாக இருக்கிறது. 

அமுதன் இஸ்மாயில் - கோவை