Vannappalagai 24X7
புதிய உறவுகள் புதிய வரவுகள் வணிகத்தை வசப்படுத்தும் தருணங்கள்.
Friday, 22 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

வாங்க பழகலாம்! 
விறு_விறுப்பான பிஸ்னஸ் தொடர்
எழுத்து ; கவிஞர் நிஷா மன்சூர் 

ஒரு மனிதனுக்கு இரண்டு கைகளும் இரண்டு கால்களும் ஒரு உடம்பும் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும்தான் இருக்கிறது. ஆனால் அளப்பரிய ஆற்றல் வாய்ந்த மூளையும் சிந்திக்கும் திறனும் உள்ளது. இதன் மூலம் நம் திட்டப்படிப் பணிபுரியும் ஆயிரம் கரங்களை உருவாக்க முடியும். இந்திய தேசத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை கொண்ட ரிலையன்ஸ் நிறுவனமே ஆனாலும் அதன் தலைவர் முகேஷ்அம்பானி  பிரதமர் மற்றும் ஜனாதிபதியுடன் அமர்ந்து தேநீர் பருகிக் கொண்டிருந்தாலும்  அதன் பிரதிநிதிகள் தமது பொருட்களை அல்லது சேவையை விற்க நமது அலுவலக வாசலில்தான் காத்துக்கிடக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 

சரி,
நமது நிறுவனத்தின் கிளைகளைப் பரப்பி விட்டோம்.ஒவ்வொரு கிளைக்கும் ஒரு மேலாளரையும் கண்காணிப்பாளர்களையும் ஃப்ளோர் மேனேஜர்களையும் நியமித்து விட்டோம். ஒவ்வொருவருக்கும் நல்ல சம்பளமும் நிர்ணயித்து விட்டோம். தானாக எல்லாம் நடந்து விடுமா ???
வருடாவருடம் விற்றுமுதலை உயர்த்தி லாபத்தை அதிகரித்துக் கொண்டு வந்து நம்மிடம் சேர்த்து விடுவார்களா ??

ஒருக்காலும் நடக்காது. 
ஒரு வணிகத்தின் மொத்த வளர்ச்சியின் சாவியே முடிவெடுக்கும் திறன்தான். நாம் சிந்திப்பதைச் செயல்படுத்தும் ஆட்களை நம்மால் உருவாக்க முடியுமே அன்றி நம்மைப்போலவே சிந்திக்கும் ஆட்களை நம்மால் உருவாக்கவே முடியாது. ஒருவேளை மிக அபூர்வமாக அப்படி ஒருவர் சிந்தித்தார் எனில் அவரும் ஒரு முதலாளியாகி விடுவாரே அன்றி நம்மிடம் பணிபுரிந்து கொண்டிருக்க மாட்டார். 

எனவே ஓரளவு திறமை வாய்ந்த ஆட்களை பொறுக்கி எடுத்து உரிய பொருப்புகளை அளித்து அதனைச் சிறிதும் தொய்வின்றி கவனிப்பதன் மூலம் ஒரு முழுமையான வேகமும் துடிப்பும் மிகுந்த குழுவை நம்மால் உருவாக்க முடியும். தினமும் பல்துலக்குவது போல தினம்தினம் குளிப்பதுபோல ஒரு நொடியும் இடைவேளை இன்றி அவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

நீங்கள் சமூகத்தில் உன்னிப்பாக கவனித்துப் பார்த்தீர்கள் எனில் பல்துறை விற்பன்னர்கள் என்று அறியப்பட்ட பலரும் எந்த ஒரு காரியத்தையும் உருப்படியாகச் செய்திருக்க மாட்டார்கள். மகாகவி அல்லாமா இக்பால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்,
"ஒற்றைச் சிந்தனையுடன் இயங்கும் மனிதனே இலக்குகளை அடைகிறான்.' நாம் ஊன்றி கவனித்தோமெனில் ஒரு துறையில் பெரும் சாதனையைப் படைத்தவர்கள் இன்னொரு துறையில் அரிச்சுவடி கூடத் தெரியாதவர்களாக இருப்பார்கள். தமிழ்த்தாத்தா என்று புகழப்படும் உ.வே.சாமிநாதய்யர் ஆங்கிலத்தில் பாஸ்மார்க் கூடப் பெறாமல் தோல்வியடைந்தவர் என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் ? பல்துறை விற்பன்னர் என்பதெல்லாம் சும்மா சீன் காண்பிக்கத்தான் உபயோகப்படும். தமது துறை/தொழில்/இலக்கு எதுவென்று ஆராய்ந்து அறிந்து அந்த ஒற்றை இலக்கை நோக்கி நகர்பவர்களே பெறும் சாதனையாளர்களாகத் திகழ்கிறார்கள்.

தலைமைப் பண்பு என்பது வெறுமனே கிரீடங்களைச் சுமந்துகொண்டு திரிவது அல்ல.

ஒரு அமைப்போ இயக்கமோ நிறுவனமோ துவங்கும்போது அனைவருக்குமே ஒரு உத்வேகம் இருக்கும்.லட்சிய இலக்கு இருக்கும்.அதனால் எவ்வித மனவேறுபாடுகளுமின்றி உழைக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வந்து நிற்கும்போது சில வெற்றிகளுக்கான கிரீடத்தை  யார் சுமப்பது என்கிற அளவில் கருத்து வேறுபாடுகள் தலையெடுக்கும்.

அந்த நேரத்தில் பக்குவமாகவும் அரவணைப்புடனும் தலைமைப் பண்புடனும் வழிநடத்த வேண்டிய பொறுப்பு ஒரு தலைவனுக்குத்தான் உள்ளது.  தோல்விகளை சுமைமாற்றி வைப்பதும் வெற்றிகளை தன் தலையில் சூட்டிக்கொள்வதும் ஒரு நல்ல தலைவனுக்கு அழகல்ல.
வெற்றியைப் பகிர்ந்தளித்தும் தோல்விகளை சிரமேற்றியும் உண்மையான நேசத்துடனும் பரந்த சிந்தனையுடனும் அணுகி அரவணைப்பவனே வெற்றியைநோக்கி முன்னகர்பவன் ஆவான். 

அதையும்மீறி ஒரு சிக்கல் வந்துவிட்டாலோ நிறுவனமோ இயக்கமோ இரண்டுமூன்று பட்டாலோ புலம்பித் தள்ளாமலும் நான் அப்படிச் செய்தேனே இப்படிச்செய்தேனே என்று அழுது அரற்றிக் கொண்டிருக்காமலும் அடுத்த கட்டத்தை நோக்கி தீர்க்கமான சிந்தனையுடன் நகர்பவனே தலைமைக்கு மிகப்பொருத்தமான ஆளாக இருக்க முடியும். 

இன்னும்_சிந்திப்போம்.