Vannappalagai 24X7
மறைக்கப்பட்ட மாணிக்கம் பரண் மேல் வீசப்பட்ட உயில்
Wednesday, 27 Nov 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ! இது இந்திய மக்களின் ஒட்டு மொத்த அடையாளம். எனவே, இந்த அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய பொது உரையாடலை இன்று முதல் தொடங்கிடுவோம். 

75- ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு, நம்மோடு பயணித்து வருகின்ற இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தையும், அதில் உள்ள ஷரத்துகளையும் நாம் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.

 காரணம்?..?.?  

நம்மைச் சுற்றியும் இயங்கி வருகின்ற பள்ளிக் கல்வி & மேற்படிப்பு கல்வி நிலையங்கள், கலை- இலக்கிய - பண்பாட்டு வெளிகள், பொது-  அச்சு & மின்  ஊடகங்கள், பொழுது போக்குத் திரைப்பட & நாடகங்கள் - என எந்தவொரு தளத்திலும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றிய கூறுகள் இடம் பெறவேயில்லை. அத்தனை ஏன் ?  

ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான இந்திய நீதிமன்றங்கள் கூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீது போதிய வெளிச்சத்தை பாய்ச்சவில்லை. அதே நீதிமன்ற வளாகங்களில் உலவிக் கொண்டிருந்த சட்ட அறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள், அரசியல் கூர் நோக்கர்கள் - போன்ற ஆளுமைகள் கூட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை தேவைப்படும் போது தரவிறக்கம் செய்து கொள்ளும் ஒரு "ரெபஃரன்ஸ்" புத்தகமாக மட்டுமே பயன்படுத்தினார்கள். மாறாக, அதில் பொதிந்துள்ள ஜனநாயகத் தன்மைகளை பற்றி எளிய மக்களுக்குப் புரியும் படி எடுத்துச் சொல்லவில்லை. காரணம், அவர்களும் இதே இந்தியச் சூழலில் பிறந்து, வளர்ந்து மேலே வந்தவர்கள் என்பதால் அவர்களுக்கும் கூட இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை.  

அது என்ன
"இந்தியச் சூழல்...?"-  

ஆம் ! நண்பர்களே !  
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவான அந்த நொடியில் இருந்தே, அதற்கு எதிரான இந்தியச் சூழலும் இங்கே உருவாகி விட்டது.  

அன்றைய இந்திய பாராளுமன்றத்தில் இரவு- பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்த ஒவ்வொரு மக்கள் தலைவர்களும், இந்திய விடுதலைப் போரில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள். எனவே, பல இன்னல்களை கடந்து போராடிப் பெற்ற நாட்டின் சுதந்திரத்தை  எப்படி எல்லாம் பாதுகாக்க வேண்டும்!. எப்படி எல்லாம் அதனை விரிவு படுத்த வேண்டும் !- என்ற அக்கரையும், தொலை நோக்கு பார்வையும் அவர்களிடம் இருந்தது. இதனால், புதிதாக கிடைத்த சுதந்திர இந்தியாவை ஒரு சுய நிர்ணய இந்தியாவாக மாற்றுவதற்கு திட்டமிட்டார்கள். கூடவே, அதற்கான, குழுவினை அமைத்து அதில் இந்த தேசத்திற்கான புற வடிவத்தை உருவாக்கினார்கள்.  அதன் விளைவாகவே நமக்கு ஒரு குடியரசு இந்தியா என்ற இந்தியக் குடியரசு கிடைத்தது. ஆனபடியால், நமது தேடல்களை "இந்தியக் குடியரசு"- என்றால் என்ன ? - என்ற கேள்வியில் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான பல்வேறு விடைகளும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நம்மை கை பிடித்து அழைத்து சென்று விடும். இந்த மையப் புள்ளிக்கு வரும் போது தான் இந்திய ஜனநாயகத்திற்கும் பொது மக்களாகிய நமக்கும் உள்ள தொப்புள் கொடி உறவுகள் நமக்கு பிடிபடும்.  

ஆனால், இப்படி எல்லாம் நாம் ஒரு தேடுதல் பயணத்தை தொடங்கி விடக் கூடாது, நமக்கான உண்மைகளை தெரிந்து கொள்ளக் கூடாது என்றே இங்குள்ள வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து பல வேலைகளை செய்து வருகிறது.  

அதன் படி, இந்த ஜனநாயகத்தின் மீதும், அரசமைப்பின் மீதும், அதனை கையாளும் அரசியல் தலைவர்கள் மீதும் ஊடக விமர்சனங்கள் என்ற பெயரில் ஒரு சந்தேக நிழலை அதன் மீது படர விட்டார்கள். இதன் மூலம் அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் நமக்குமான இடைவெளியை திட்டுமிட்டு அதிகப் படுத்திக் கொண்டே வந்தார்கள். நாளடைவில் அதனை மறக்கடிக்கும் வேலைகளையும் செய்தார்கள். இதற்கு மாற்றாக, பொது ஊடகங்கள் முழுக்கவும் பல்வேறு தேவையற்ற வாத- விவாதங்களை உருவாக்கி நம்மை அதில் மூழ்கடித்தார்கள்.  

குறிப்பாக, வெகு ஜனங்களிடம் சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களையும், படித்த மத்திய தர வர்க்கத்தினரிடம் கிரிக்கெட் பற்றிய நவநாகரீக உரையாடல்களையும் படர விட்டார்கள். அதிலும் குறிப்பாக, இளைஞர்களின் பொது அறிவு என்பதே கிரிக்கெட் பற்றிய புள்ளி விபரங்கள் மட்டுமே என்ற ஒரு கொடும் இந்தியச் சூழலை  இந்திய வலது சாரிகள் உருவாக்கினார்கள். 

அதற்கு ஏற்ற பல்வேறு புனைகதைகளை உருவாக்கினார்கள். இதன் வழியாக இந்திய தேசத்தின் மீது நமக்கு எந்த வகையான நல்ல மதிப்பீடுகளும் உருவாகாத வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.  

இந்தக் கொடும் இந்திய சூழலை உடைக்கும் போது தான் நமக்கு இந்திய தேசம் பற்றிய சரியான பார்வை உருவாகும். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை உண்டாகும். அது வரையிலும்.... 

இங்கு உள்ள ஊழல்கள், அதிகார முறைகேடுகள், சுரண்டல்கள் என அனைத்து அயோக்கித் தனங்களுக்கும்  இந்திய ஜனநாயக முறையே காரணம் என மொன்னையாக வாதம் செய்து கொண்டிருப்போம்.     
 
இனியாவது அந்த மொன்னையான வாதங்களை எல்லாம் சற்று ஓரங்கட்டி வைத்து விட்டு இந்திய குடியரசு பற்றியும், இந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றியும் ஆக்கப்பூர்வமாக பேசத் தொடங்குவோம். 

????

*வண்ணப்பலகை*
(27, நவம்பர், 2024) 

????????‍♂️