Vannappalagai 24X7
தெருச் சண்டை தேர்தலுக்கு உதவாது. நடிகர் விஜய் சொன்ன இறுமாப்பு
Sunday, 08 Dec 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

"200- தொகுதிகளில் வெற்றி பெறுவோம்"- என்பது தேர்தலை எதிர் கொள்ளப் போகும் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் கால  "நெரேட்டிவ்" (கதையாடல்) இப்படி ஒரு இலக்கை நிர்ணயித்து வேலை செய்யும் போது தான் அதில் மூன்றில் இரண்டு பங்கை கைப்பற்ற முடியும். இது தான் அரசியல் எதார்த்தம்.  

இந்த வெளிப்படையான உண்மையைக் கூட புரிந்து கொள்ளாமல், ஆளும் தி.மு.க. 200 தொகுதிகளை கைப் பற்றுவோம் என இறுமாப்போடு கூறுவதாக நடிகர் விஜய் கூறி இருப்பது அவரது அரசியல் அறியாமையையே காட்டுகிறது. அது மட்டுல்லாது, அவர் தன்னுடைய ரசிகர்களை எப்படிப் பட்ட வாக்காளர்களாக மாற்ற நினைக்கிறார் ? என்ற உளவியலும் இதில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரு அரசியல் கட்சியை கொள்கை அளவில் எதிர்க்கத் தெரியாமல், அக் கட்சியின் மீது காழ்புணர்வையும், பொறாமையையும்  வெளிப்படுத்தும் வகையில் பேசி உள்ளார். மேலும், அதை தனது ரசிகர்களின் மனதிலும் பற்ற வைக்க முயற்சி செய்துள்ளார். இது தெருச் சண்டையை விட கேவலமான செயல். இப்படியான தெருச் சண்டையை அவர் தி.மு.க. வின் மீது பாய விடுவதன் மூலம், ஓட்டு மொத்த அரசியல் வெளியையும் கேலிக் கூத்தாக மாற்றியுள்ளார்.

இப்படி ஒரு கேலிக்கூத்தை மக்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இது ஏதோ புதிதாக கட்சி ஆரம்பித்த ஒரு நடிகன் பேசிய மேடைப் பேச்சு என கடந்து போய் விட முடியாது. இது தமிழ்நாட்டு வாக்காளர்களின் சுயமரியாதையை சிதைக்கும் பேச்சு இது. 

தனக்கு என கணிசமான கூட்டமும், மேடையும், அரசியல் ஆசையும் கை கூடி வந்து விட்டால், மக்களிடம் சென்று நாம் எப்படியும் பேசலாம். அதனை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற இறுமாப்பு வந்து விடுகிறது. அதே இறுமாப்போடு எதிரில் உள்ள அரசியல் கட்சியைப் பார்த்து இறுமாப்போடு இருப்பதாக பேச வைக்கிறது.  

இந்த விசிலடிச்சான் அரசியல் எல்லாம் இந்த மண்ணில் எடுபடாது. பொது ஊடகங்களுக்கும், வலை தள ஊடகங்களுக்கும் ஒரு சில நாட்களுக்கு "கன்டன்ட்"- கிடைக்கும். That's all. 

@வண்ணப்பலகை 
(08, டிசம்பர், 2024)