Vannappalagai 24X7
புதிய பார்வை, புதிய கோணம் அம்பேத்கார்: இனி தவிர்க்க இயலாத சக்தி.
Saturday, 21 Dec 2024 00:00 am
Vannappalagai 24X7

Vannappalagai 24X7

இது நாள் வரையில் நம் வீட்டு புத்தக அலமாரியில் ஒரு "செட் பிராப்பர்ட்டீ" போல வீற்றிருந்த டாக்டர் அம்பேத்காரிய சிந்தனைகளை கையில் எடுப்பதற்கு சரியான நேரம் வந்து விட்டது. போலவே, நம்மையும் ஒரு ஜனநாயகவாதியாக வெளிக்காட்டிக் கொள்ள, தேவையான இடங்களில் அம்பேத்காரின் பெயரை "ஸ்பைஸிஸ்"- போல நாம் பயன்படுத்தி வந்தோம் அல்லவா?  இனி அப்படி எல்லாம் நுனிப்புல் மேய முடியாது. பாபா சாகேப் பற்றி இன்றைக்கு முழுமையாகப் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாம் வந்து விட்டோம். 

ஆம்... நண்பர்களே ! 

இன்றைய வலதுசாரிய பாசிச அரசியல் சூழலில், அரங்கேறிக் கொண்டிருக்கும் அடிப்படை அறமற்ற போக்குகளை எதிர் கொள்ள, டாக்டர் அம்பேத்கார் என்ற தடுப்பாட்ட ஆயுதம் நமக்கு மிக அவசியமாகி விட்டது. . 

தமிழ்நாட்டில்  தந்தைப் பெரியாரின்  கருத்தியல்களை  கையில் ஏந்திப் போராடுவது போன்று, இந்திய அளவில் போராட  டாக்டர் அம்பேத்காரின் சிந்தனைகளும், வழிகாட்டல்களும் நமக்கு மிக,மிக அவசியமாக உள்ளது. போலவே, தந்தைப் பெரியாரையும், உடன் இணைத்துச் செல்வது அதை விட அவசியமாகிவிட்டது. 

அதிலும் குறிப்பாக, சித்தாந்த அரசியல் பேசி வரும் நமது ஊர் அறிவு ஜீவிகள், இனி அதனை தங்களுக்குள்ளாக மட்டும் பேசிக் கொண்டிருக்காமல், மக்களிடையேயும் பேச வேண்டும். அதனை மக்களுக்கான மொழியில், மக்களுக்கான அரசியலாகப் பேச வேண்டும். இப்படி எல்லாம் பீடத்தில் இருந்து இறங்கி வந்தால் தான் வலதுசாரி பாசிச அரசியல் சக்திகளுக்கு நம்மால் உரிய பதிலடி தர முடியும். 

அப்படி எல்லாம் உரிய பதிலடி தருவதற்கு இந்தியத் துணைக் கண்டத்தின் அசலான ஆன்மா எது என்றும் ? அந்த ஆன்மாவை எவை எல்லாம் சிறை பிடித்து வைத்துள்ளன ? என்கிற முழு விபரங்களும் நமக்குத் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். அதற்கு  சர்வதேச சட்டம் & பொருளாதாரம் பற்றிப் படித்துப் பட்ட பெற்ற டாக்டர் அம்பேத்கார் என்ற சட்டமேதையின் ஆய்வுகளையும், எழுத்துக்களையும், பேச்சுக்களையும், அவர் தலைமையில் வரைந்த அரசமைப்பு சட்டங்களையும், பொருளாதாரத் திட்டங்களையும் ஒரு மீள் பார்வை பார்த்தாக வேண்டும். மேலும், அவருடைய படைப்புகளில் தான், நமக்கான அரசியல் விடுதலைக்கான பல்வேறு விடைகளும் காத்துக் கிடக்கின்றன. 

நமது நாட்டில் எத்தனையோ தலைவர்கள் உருவாகி இருக்கலாம். அவர்கள் இந்த தேசத்தை உருவாக்கி இருக்கலாம். அவர்கள் எல்லாம் உயிர் உள்ள உடலின் பல்வேறு உறுப்புகளைப்  போன்றவர்கள். ஆனால், டாக்டர் அம்பேத்கார் நமது தேசத்தின் உள்ளுருப்பை போன்றவர். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேலெழுந்து வந்த காரணத்தால், இந்த தேசத்தின் நோய் கூறுகள் எவை ? அதிலிருந்து இந்த தேசத்தை எப்படிக் காப்பாற்றுவது ? அத்தற்கான "ஆன்ட்டீ- பயாட்டிக்"- எது ? அதனை எப்படி உருவாக்கி, எப்படி பயன்படுத்துவது ? அதற்கான தீர்வுகள் என்னென்ன ? என்ற பல்வேறு விடைகளை நமக்கு அவர் விட்டுச் சென்றிருக்கிறார். எனவே, இனியும் அவரை ஒரு தரப்பு சமூகத்திற்கான ஆளுமை தானே ? எனத் தள்ளி வைத்திடாமல், நமது அரசியல் போராட்டக் களத்தின் மைய மண்டபத்திற்கு  அவரை அப்படியே கலையாமல் அள்ளிக் கொண்டு வர வேண்டும்.  

மதவாத, சாதீயவாத, சனாதான போக்குகள் நிறைந்த, க்ரோனிக்கல் தன்மை கொண்ட முதலாளித்துவ போக்குகளில் இருந்து நம்மையும், நமது நாட்டையும் காப்பாற்றிக் கொள்வதற்கான பல்வேறு கூறுகளை  இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் டாக்டர் அம்பேத்கார் எழுதி வைத்து விட்டுப் போய் விட்டார். எனவே, அவற்றை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து அதனை மக்கள் பார்வைக்கு கொண்டு வந்தாலே போதும், இங்கே அரசியல் மாற்றங்கள் தானாக நடக்க ஆரம்பித்து விடும். அந்த தீர்க்கமான திசையை நோக்கி நாம் திரும்ப வேண்டும்.  

இதுவரையிலும் தனித்தனியாக நின்று கொண்டு மார்க்ஸ்ஸியத்தையும், காந்தியத்தையும், கம்யூனிஸத்ததையும், திராவிடத்தையும் கூர்மையாக பேசிக் கொண்டிருந்த நாம் அனைவருமே ஒரே புள்ளியில் இணைய வேண்டிய நேரம் முகிழ்த்து விட்டது. 

"வனத்தில் ஒரு பூவைப் பறித்தேன். வானத்தில் இருந்து   நட்சத்திரம் ஒன்று உதிர்ந்தது"- என ஒரு மேனாட்டுக் கவிஞன் பாடி வைத்தது போல,  

இந்திய நாடாளுமன்றத்தில் அம்பேத்கார்.... 
அம்பேத்கார்....அம்பேத்கார்.... அம்பேத்கார்..... அம்பேத்கார்.... அம்பேத்கார்..... அம்பேத்கர்......என ஏழு முறை வலதுசாரிகள் எகத்தாளமாக கொக்கரித்தார்கள். அதற்கான எதிர் வினையாக தேசத்தின் எட்டுத் திக்குகளிலிருந்தும்  "அண்ணல் அம்பேத்கர்"- என்ற பெயர் மிக உக்கிரமாக எதிரொலிக்கத் தொடங்கி விட்டது.  

இனியாவது புரிந்து கொள்வோம். டாக்டர் அம்பேத்கார் ஒரு தரப்பினரின் தலைவர் அல்ல. அண்ணல் அம்பேத்கார் நம்முடைய தேசத்து தலைவர்களுக்கு எல்லாம் தலைவர். அதற்கான அறிவும், புலமையும், புத்திக் கூர்மையும், செயல் திறனும் அவருக்கு இருந்தது. அவருடைய படைப்புகளுக்கு இருக்கிறது. இதைத்தான் இன்றைய போராட்டக் களங்கள் நமக்கு துல்லியமாக எடுத்துரைக்கின்றன. 

ஜெய் ஹிந்த்!
ஜெய் பீம்!!
அல்லாஹூ அக்பர் !!!   

வண்ணப்பலகை
(21, டிசம்பர், 2024)