தேசிய சாலைப் பாதுகாப்பு வார விழா
( ஒர் அலசல் )
1988- ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் அரசால் புதிய மோட்டர் வாகனச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் படி வாகனங்களின் போக்குவரத்து துறை குறியீட்டு எண்கள் கணினி மயமாக்கலுக்கு ஏற்ப TN-01, KL-01, AP-01 என இந்தியா முழுக்க மாற்றி அமைக்கப்பட்டது. அதற்கு ஆண்டு 1989- முதல் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் கடை பிடிக்கப்பட்டது.
குறிப்பாக, ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் கடை பிடிக்கப்பட்டது. இந்த நேரங்களில் நாடு முழுக்க பல்வேறு அமர்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், பேரணிகள், புகைப்பட கண்காட்சிகள் - என பல்வேறு வடிவங்களில் மக்களிடையே விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப் பட்டது.
அதிலும் குறிப்பாக, புதிய போக்குவரத்து விதிகள், விபத்துகளை தவிர்க்கும் ஆலோசனைகள், விபத்துக் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய அவசரகால நடவடிக்கைகள் - என பல்வேறு கோணங்களில் விழிப்புணர்வு ஊட்டப்பட்டது.
கடந்த 35- ஆண்டுகளாகவே நடந்து வரும் இந்த தேசிய சாலை பாதுகாப்பு வார நிகழ்ச்சிகள் வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் பயன்களை அளித்து வருகின்றது. ஆனாலும், இந்த நடவடிக்கைகள் அனைத்துமே அரசுத் துறை சார்ந்து நடைபெற்று வருவதால் காலப் போக்கில் அதில் ஒரு வகையான மனசோர்வுகளே மிகைத்துள்ளன.
சாலை பாதுகாப்பு என்றாலே அதனை விபத்துகளோடு மட்டும் ஒப்பிட்டு பேசுவது. அதிலும் கோரமான விபத்துக்களை காட்சிப் படுத்துவதன் வழியாக மக்களிடையே அச்சத்தை ஊட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி விடலாம் என்ற முதிர்ச்சி அற்ற அணுகு முறைகளே அரசு தரப்பில் கடை பிடிக்கப் பட்டு வருகிறது. இந்த அசமந்தமான போக்குகளை மெல்ல,மெல்ல மாற்றிக் கொண்டு, இன்றைய நவீன கால உளவியல் பகுப்பாய்வு முறைகளை நாம் முழு வீச்சில் பயன்படுத்த வேண்டும்.
ஒரு பயணத்தின் நோக்கம் பற்றி பேசுதல். அந்த பயணத்திற்கு உதவும் வேகத்தைப் பற்றி பேசுதல். அந்த வேகம் ஊடுருவிச் செல்லும் காலத்தைப் பற்றி பேசுதல். அந்த காலத்தை செலவிட்டு நாம் அடைகின்ற இலக்கினைப் பற்றி பேசுதல். இதற்கெல்லாம் மூலதனமாக உள்ள மனித சக்தியை, மனித வளத்தைப் பற்றி பேசுதல்.
இப்படி நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை எல்லாம், சாலை பாதுகாப்பு அம்சங்களோடு இணைத்துப் பார்க்கும் சமூக ஆய்வு முறையை நாம் கையில் எடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற சமூக ஆய்வுகள், கள ஆய்வுகள், கோட்ப்பாட்டு ஆய்வுகள் மேற் கொள்ளப்பட வேண்டும்.
இது போன்ற நவீன அணுகு முறைகள் தான் வெகு மக்களையும், இன்றைய இளைய தலைமுறைகளையும் கவரும் படி அமையும். இந்த நவீன அணுகு முறைகளால் வெகு மக்களும், இளைய தலைமுறைகளும் தன்னியல்பாக கலந்து கொள்ள ஆரம்பித்து விடுவார்கள். வழக்கம் போல அதனை சமூக ஊடகங்கள் வழியே கொண்டாடியும் தீர்த்து விடுவார்கள்.
வண்ணப்பலகை
(09, ஜனவரி, 2025)
"அறிவே ஆற்றல் ஆண்டு"