
இந்திய அணியின் ஆணவம்.. ஆஸ்திரேலிய செய்தியாளர் கடும் விமர்சனம்
- By --
- Tuesday, 29 Oct, 2024
சிட்னி: ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அவசர, அவசரமாக பிசிசிஐ அறிவித்தது "திமிர்த்தனமானது" என்றும், இந்திய அணியின் "ஆணவம்" என்றும் ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ராபர்ட் கிரடாக் கூறி இருக்கிறார். இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 1 முதல் நடைபெற உள்ளது. இதற்கு முன் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முடிந்த அன்று, இரவு நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அவசர, அவசரமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு அடுத்த நாள் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடையும் சூழ்நிலையில் இருந்தது. அதற்கு முன்னதாக பிசிசிஐ ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது. அது மிகவும் திமிர்த்தனமானது என்று ராபர்ட் கிரடாக் கூறி இருக்கிறார். மேலும், முகமது ஷமி உள்ளூர் போட்டியில் ஆடவில்லை என்ற ஒரு காரணத்தை சொல்லி அவரை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆடவிடாமல் செய்து விட்டார்கள் எனவும் அவர் கூறி இருக்கிறார். இது பற்றி ராபர்ட் கிரடாக் பேசுகையில், "இது மிகவும் திமிர்த்தனமானது. இதை பற்றி நான் நிச்சயம் பேசுவேன். நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டது எத்தனை ஆணவமானது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நியூசிலாந்துக்கு எதிராக இன்னொரு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாட வேண்டிய நிலையில் உள்ளது." என்றார். மேலும், "ஆனால், அதற்கு முன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியை அவர்கள் பிரமாதமாக அறிவித்து விட்டார்கள். முகமது ஷமி எத்தனை திறமை வாய்ந்த பந்துவீச்சாளர். ஆனால், அவர் உள்ளூர் போட்டியில் ஆடவில்லை என ஒரு கோட்டை கிழித்து வைத்து, அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. என்னை கேட்டால் அவருக்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விளையாட வேண்டிய அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க வேண்டும். அவர் வலைப் பயிற்சியில் பந்து வீசிய வீடியோவை நான் பகிர்ந்து இருந்தேன். ஷமி நிச்சயம் ஆட வேண்டும்." என்றார் ராபர்ட் கிரடாக்.