1000935325

இனி மூன்று குழந்தைகள் வேண்டும்.

சீனாவில் தேய்ந்து வரும் மக்கள்தொகை

சீனாவில் மக்கள் தொகை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை அந்த நாடு செய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 75 ஆண்டுகளில் சீனாவின் மக்கள்தொகை தற்போது இருப்பதைவிட பாதியாக குறையும் என்று ஐநா கணித்துள்ளது. பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதால் கவலை அடைந்துள்ள சீனா, தம்பதிகள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகவும் பரப்பளவில் உலகின் 4-வது நாடாகவும் உள்ளது சீனா. உலக மக்கள் தொகையில் பல ஆண்டுகளாக முதலிடத்தில் சீனா இருந்தது. இதனால், மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஒரு குழந்தை மட்டுமே பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என உத்தரவு போடப்பட்டது.

இந்த உத்தரவு கடுமையாக பின்பற்றப்பட்டதால் சீனாவில் பிறப்பு விகிதம் சரியத்தொடங்கியது. 1980 முதல் 2015 வரை இந்த விதி அமல்படுத்தப்பட்டு இருந்தது. குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக சரிந்ததோடு முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒரு குழந்தை கொள்கையை சீனா கைவிட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற அனுமதி வழங்கியது.

ஆனாலும் சீனாவில் பிறப்பு விகிதம் என்பது தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. சீனாவில் மக்கள் தொகை சரியத்தொடங்கியதால், அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்ற இடத்தை இந்தியா பிடித்துள்ளது. தற்போது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்திலும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருவதால் கவலை அடைந்துள்ள சீனா, தம்பதிகள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. என்னதான் முயற்சி எடுத்தாலும் சீனாவிற்கு தற்போது வரை பலன் கிடைத்ததாக தெரியவில்லை. இதனிடையே, சீனாவுக்கு அதிரச்சி அளிக்கும் விதமாக மற்றொரு தகவலை ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

தோராயமாக அடுத்த 80 ஆண்டுகளில், அதாவது 2100-ம் ஆண்டு வாக்கில், சீனாவின் மக்கள் தொகை, தற்போது இருப்பதை விட பாதியாக குறைந்து விடும் என்று ஐக்கிய நாடுகள் அவை கணித்துள்ளது. சீனாவில் தற்போது 141.07 கோடி மக்கள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டு இருப்பது சீனாவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

சீனாவில் மக்கள் தொகை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்தால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும். அது மட்டும் இன்றி முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் காரணமாக ஓய்வூதிய திட்டம், சுகாதார திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்படும். இதனால் சீனா கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக உள்ள இந்தியாவில் மக்கள் தொகை 2060ல் தனது உச்சத்தை எட்டும் எனவும் அப்போது மக்கள் தொகை 170 கோடியாக அதிகரிக்கும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்பிறகு மக்கள் தொகை 12 சதவீதம் குறைய தொடங்கும் எனவும் இருந்தாலும் இந்த நூற்றாண்டில் மக்கள் தொகையில் முதலிடத்தில் இந்தியாவே இருக்கும் எனவும் ஐநா கணித்துள்ளது. 

கிள்ளியூர் இளம செழியன் - சென்னை 


Comment As:

Comment (0)