1000918536

அரசு மருத்துவர்கள் கடும் அதிருப்தி

அரசு டாக்டருக்கு கத்திக் குத்து- கிண்டியில் பரபரப்பு

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து:

சென்னை பெருங்களத்துரை சேர்ந்தவர் விக்னேஷ். இவரது தாயார் பிரேமாவிற்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து சென்ற ஆண்டு மே முதல் நவம்பர் வரை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் தனது தாயாருக்கு சிகிச்சை மேற் கொண்டு வந்தார். புற்றுநோய் டாக்டர் பாலாஜி இந்த சிகிச்சையை அளித்து வந்தார். ஆனால் விக்னேஷின் தாயார் பிரேமாவிற்கு நோய் குணமாகவில்லை. இதனை அடுத்து சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஜாக்லின் மோசஸ் என்ற தனியார் மருத்துவரிடம் விக்னேஷ் ஆலோசனை செய்துள்ளார். அப்போது அவர், அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும். இது மோசமான பக்க விளைவுகளை  ஏற்படுத்தியுள்ளது என்றும். எனவே, அதனை எதிர்த்து அரசு மருத்துவர் மீது வழக்குத் தொடரலாம் என்றும் கூறியுள்ளார்.

மேற் சொன்ன விபரங்களை கேட்டறிந்த விக்னேஷ் கடும் கோபம் அடைந்தார். இன்று காலை நேராக கிண்டியில் உள்ள கலைஞர்கள் நூற்றாண்டு அரசு மருத்துவமனைக்கு சென்று தனது தாயாருக்கு சிகிச்சை அளித்த புற்றுநோய் டாக்டர் பாலாஜி அவர்களை சந்தித்து பேசி உள்ளார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை வாக்குவாதமாக மாறியது. அப்போது வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து எதிர்பாராத விதமாக டாக்டர் பாலாஜியின் கழுத்தில் விக்னேஷ் இரண்டு முறை குத்தினார். இதனால் நிலைகுலைந்து போனா டாக்டர் பாலாஜி அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே, சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்ல  முயன்ற குற்றவாளி விக்னேஷை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். உடனே அந்த சரகத்திற்கு உட்பட்ட போலீஸ்  அதிகாரிகள் அவரை உடனே கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்தனர்.

அரசு மருத்துவமனையில் எதிர்பாராமல் நடந்த இந்த கொலை முயற்சியை கேள்வியுற்ற சுகாதாரத் துறை அமைச்சர் மா.ந.  சுப்பிரமணியம் உடனே,  சம்பவ இடத்திற்கு விரைந்தார். அவரை அடுத்து தமிழ்நாட்டின் உதவி முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த அரை மணி நேரத்தில் அதே சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தார். பணியில் உள்ள மருத்துவரை கொலை செய்ய முயற்சித்த அந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி கூறினார்.

இதற்கிடையில் பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்புகள் இல்லை என்று கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவக் கல்லூரிகள், அவசர சிகிச்சைப் பிரிவுகள்,  உயிர் பாதுகாப்பு சிகிச்சை பிரிவுகள்- போன்வற்றை தவிர்த்து, பிற அனைத்து மருத்துவர்களும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இன்று மாலை 4 மணி அளவில் அரசு மருத்துவர் சங்கத்தின் முதன்மையான உறுப்பினர்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.ந.சுப்ரமணியம் சந்தித்து பேசிக் கொண்டிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சக செய்தி குறிப்புகள் கூறுகின்றன. 

எதிர் பாராமல் நடந்த இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் எனவும்,  எதிர்காலத்தில் இது போன்ற விபரீதமான நிகழ்வுகள் நடந்திடாத வண்ணம் அரசு மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார். 

நடந்து முடிந்த இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவர்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

By 

முத்தழகன் - சென்னை


Comment As:

Comment (0)