
உலகை மாற்றும் தேர்தல்
- By --
- Tuesday, 05 Nov, 2024
அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும், இந்திய நேரப்படி நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய நேரடி வாக்குப் பதிவுகள் இன்று காலை 5:30 லிருந்து 9:30- மணிக்குள் முற்றிலுமாக முடிந்து விடும். அதன் பின், இன்று மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். சென்ற முறை 2020- ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் 4- நாட்களுக்கு பிறகே அறிவிக்கப்பட்டது. அப்போது, அப்போதைய அதிபர் ட்ரம்ப் தோற்கடிக்கப்பட்டு புதிய அதிபராக பைடன் தேர்ந்தெடுக்க பட்டார். எனவே, இந்த முறை ட்ரம்ப் மிகவும் கவனமாக உள்ளார். சென்ற முறை விட்ட பதவியை இந்த முறை பிடித்து விட தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், இவர் மீது 34 குற்ற வழக்குகள் இருப்பது அமெரிக்க அதிபர் தேர்தலின் கரும் புள்ளியாக மாறியுள்ளது.
மேலும், டிரம்ப் மீண்டும் அதிபரானால் அமெரிக்காவின் வெளிநாட்டு வர்த்தகத்தில் கடும் வரி நெருக்கடிகள் உருவாகும். இதனால் இந்திய பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியடையும். ( நேற்றைய நிலவரப்படி இ.ப.சந்தையில் 10.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது ) சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும். அமெரிக்காவில் தொழில் செய்தும், பல்வேறு பணிகள் செய்து வரும் இந்தியர்களுக்கு நெருக்கடிகள் அதிகரிக்கும். இதற்கு எல்லாம் மேலாக போர்முனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் காசா, இஸ்ரேல், உக்ரைன் மக்களின் தலை விதிகளும் மாற்றி எழுதப்பட்டு விடும். எனவே, பல் வேறு எதிர்மறை எதிர்பார்ப்புகளோடு ட்ரம்பின் வெற்றியை உலக நாடுகள் கடும் அச்சத்தோடு காத்திருக்கின்றன.
இவரை எதிர்த்து நிற்கும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரீஸ் மீது, எவ்வித சந்தேக நிழல்களும் படியவில்லை. அமெரிக்காவின் 47 வது அதிபராக இவர் தேர்ந்தெடுக்கப்படவே உலக நாடுகள் விரும்புகின்றன. மேலும், அமெரிக்காவின் முதல் பெண் அதிபரைக் காண ஒட்டு மொத்த உலகமே காத்திருக்கிறது. குறிப்பாக, கமலா ஹாரீஸ் போன்ற மென் போக்காளர்கள் அதிபராகும் போது, இந்திய பங்குச் சந்தை பெரும் ஆபத்திலிருந்து காப்பாற்றபடும். மேலும், நமக்கு வரவிருக்கும் அந்நிய மூலதனங்களின் வருகை அதிகரிக்கும். இந்திய - அமெரிக்க வர்த்தக மற்றும் மனிதவள பரிவர்த்தனைகள் செம்மையுறும்.
சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலை இந்த உலகமே எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா என்ற ஒரு வலிமை மிக்க பணக்கார தேசமானது, உலகத்தின் உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டிருக்கும் வரைக்கும் இந்த நிலையே தொடரும்.
By ஷரீப். அஸ்கர் அலி