
வினையாகும் விளையாட்டுகள்
- By --
- Thursday, 07 Nov, 2024
ஆச்சரயங்களும்..
ஆபத்துகளும்....
ஆச்சர்யங்கள்....
ஐஸ் பாய், காக்கா ஆட்டை, கில்லி தாண்டல், பம்பரக் கட்டை, லக்கோரி, ஓடு பந்து, பட்டம் விடுதல், குண்டு ஆட்டை, பாம்பான், பல்லாங்குழி, பூ பறிக்க வருகிறோம், கிச்சு,கிச்சு தாம்பூலம், நொண்டி ஆட்டை - என, பல வகையான நாட்டுப் புற விளையாட்டுகள் எல்லாம் அப்படியே தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். ஆனால், ஒரு விளையாட்டு உச்சத்தில் உள்ள போது, அதில் இன்னொரு விளையாட்டு குறுக்கே வராது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு சீசன் இருக்கும்.
ஒரு தெருவில் பம்பர விளையாட்டு ஆரம்பித்து விட்டாலே போதும். அது அப்படியே இன்னொரு தெருவுக்குப் பரவி விடும். அப்படியே அதுவரை இருந்த பழைய விளையாட்டுகள் மறைந்து போய், இந்தப் புதிய விளையாட்டு களத்தில் இறங்கி விடும். இனி அடுத்த விளையாட்டு களத்தில் இறங்கும் வரைக்கும் இப்போது களம் இறங்கிய விளையாட்டு தான் ராஜா.
இந்த வெர்ஷன் எப்போது முடிந்து அடுத்த புதிய வெர்ஷன் எப்போது அப்டேட் ஆகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், அந்தந்த காலக் கட்டத்திற்கு ,அந்தந்த வெர்ஷன்கள் லைன் கட்டி வந்து கொண்டே இருக்கும்.
பம்பரக் கட்டை விளையாட்டை
"பஸ்ட் அபீட்", "செகண்ட் அபீட்"- என்று பசங்க சலிக்கும் வரைக்கும் ஆடுவார்கள். அப்புறம் ஒரு சாயங்காலம் பள்ளிக் கூடம் விட்டு வீட்டுக்கு வரும் வழியில் பார்த்தால் பசங்க " திடீர்"- என, கில்லி- தாண்டல் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இதற்கான சப்ட்வேரை மாற்றி புதிய வெர்ஷன் ஆப்பை யார் கொண்டு வந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. ஆனால், விளையாட்டு மட்டும் மாறி இருக்கும்.
இதில் பட்டம் விடுதல் விளையாட்டு மட்டும் தான் விதிவிலக்கு பெற்றது. காற்று அடிக்க ஆரம்பித்த உடனே வவ்வால் பட்டம் வானத்தில் பறக்க ஆரம்பித்து விடும். வவ்வால் பட்டத்தில் ஆரம்பித்து, அச்சுப் பட்டம், கதவுப் பட்டம் என காற்றின் வேகத்தைப் பொறுத்து பட்டத்தின் அளவும், அதனை பறக்க விடுகின்ற ஆட்களும் மாறி விடுவார்கள்.
இது போன்ற விளையாட்டுக்கள் அனைத்துமே, நாமாக முடிவெடுத்து, நாமாகவே விளையாடிய விளையாட்டுக்கள். இதில் ஆனந்தம், ஆரோக்கியம், குழு மனப்பான்மை, கூடிக் கலைவது போன்ற பல வேறு பண்பு நலன்கள் மறைந்து நின்று ஒளி வீசிக் கொண்டிருந்தன. இவை எல்லாம் அன்றைக்கு சாதாரணமாக தெரிந்தாலும் கூட, இன்றைக்கு அது ஆச்சர்யமாக தெரிகிறது.
ஆபத்துகள்:
ஆனால், இந்த அத்தனை வகையான விளையாட்டுக்களையும் ஒரே அடியில் வீழ்த்தி விட்டு, அந்த இடத்தில் இன்றைக்கு எந்த வகையான விளையாட்டுகள் அமர்ந்துள்ளன ? விபரீதங்கள் நிறைந்த கம்யூட்டர் கேம்கள் தான் அங்கே அமர்ந்துள்ளன. இவை அத்தனையுமே மனித உணர்ச்சிகள் அற்ற இயந்திரத் தனமான விளையாட்டுகள்.
இவை ஆரம்பத்தில் குழந்தைகளின் ஐக்கியூ அறிவுகளை வளர்ப்பது போலத் தெரியும். ஆனால், பின்பு படிப்படியாக வன்முறையை சிறுவர்களுக்குள் விதைக்க ஆரம்பித்து விடுகின்றன.
இந்த விபரீத விளையாட்டுகள் வீடியோ கேம் பார்களில் ஆரம்பித்து பின்பு வீடியோ கேம்களாக வீட்டுக்குள் புகுந்து, இன்றைக்கு *"பப்ஜி"* *"சப்ஜி"* என நம்முடைய குழந்தைகளின் மூளைக்குள் புகுந்து விட்டன.
நம்முடைய ஒவ்வொரு குழ்ந்தைகளும் இன்றைக்கு தனிமையில் அமர்ந்து கொண்டு, எங்கோ தொலைவில் உள்ள மற்றொரு தனிமையான குழந்தையிடம் விளையாடிக் கொண்டுள்ளார்கள். அதனை நாமும் கண்டும், காணமல் கடந்து போய் விடுகிறோம்.
*விடாதே, பிடி, அடி, குத்து, கொல்லு,* என ஒரே கூச்சல் போட்டுக் கொண்டு விளையாடும் குழந்தைகள் இன்றைக்கு பெருகி விட்டார்கள். இதே குழந்தைகள் தான் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பு கும்பல் வன்முறையில் இறங்குகிறார்கள். அல்லது அந்த கும்பல் வன்முறையை நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.
இந்த விபரீத விளையாட்டுக்களுக்கு வெர்ஷன் அப்டேட் செய்வது நம் கையில் கிடையாது. இதன் சூத்திரங்களைப் போடுவது நீங்களோ நானோ அல்ல. கண்ணுக்குத் தெரியாத கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் இதன் சூத்திரதாரிகளாக உள்ளார்கள். இவர்களின் லாப வேட்டைக்கு நாம் சகலத்தையும் இழந்து வருகிறோம். ஆனால், இந்த இழப்புகள் அனைத்தும் நம்முடைய ஒப்புதல் படியே நடந்தேறி வருகிறது.
நம் கையில் உள்ள செல்போன்களின் வழியாகவே வந்து,
நம் கழுத்தை நெறித்துக் கொண்டிருக்கும் இந்த நவீன அரக்கர்களின் நச்சுக் கரங்களை என்றைக்கு நாம் வெட்டி எறியப் போகிறோம் ?
வண்ணப்பலகை