1000901585

குணா தோல்விப் படமா?

சென்னைக் கால சினிமா 
1991- ஆம் ஆண்டு தீபாவளிப் படங்கள். சென்னை - அபிராமி திரையங்கில் இரண்டு படங்களும் வெளியானது. இந்த இரண்டு படத்திற்கும் இளையராஜா இசை. தளபதி படம் மணிரத்னம் - ராஜா கூட்டணியின் கடைசிப் படம். ஆனால், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிய படம். பாடல்கள் அனைத்தும் ஹிட். பின்னணி இசை இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் ராஜாவை விட்டு மணி ரத்னம் வெளியேறினார் என்பது திரையுலகின் மிகப் பெரிய ஆச்சரியம். 

குணா படம் கலைப் படமா ? 
கமர்ஷியல் படமா? என்ற வழக்கமான விவாதங்களை ஊடகத்தில் கிளப்பிய படம். அதே வேளையில், கமல்ஹாசன் கதாபாத்திரம் குறித்து ரசிகர்கள் + பார்வையாளர்கள் வேறு வகையான விவாதங்களை முன் வைத்தனர். குணா - புத்திசாலியா?  அல்லது புத்தி பேதலித்தவனா? என ஒன்றும் புரியாமல் தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். ஆனால், பாடல்கள் படத்தை பேச வைத்தது. 

அந்த மாதம் வெளியான சுபமங்களா மாத இதழில் குணா ஏன் தோற்றுப் போனான் ? என கவர் ஸ்டோரி போட்ட கோமல் சுவாமி நாதன் மீது கமல்ஹாசன் கடும் கோபம் கொண்டதாக சிற்றிதழ் நண்பர்கள் தங்களுக்குள் செய்திகளை பரிமாறிக் கொண்டு, தங்களின் அறிவுஜீவி மோஸ்தரை தக்க வைத்துக் கொண்டார்கள். 

அதற்கு ஏற்றார் போல, சலனம் என்ற திரைப்பட மாத இதழ் தளபதி படத்தின் தொழில் நுட்பங்களை, கேமிராக் கோணங்களை,  அதிகமான க்ளோஷப் ஷாட்டிகளில் படத்தை எடுத்த தைரியத்தை பாராட்டி எழுதி இருந்தது. இந்த சூழலில், காத்திரமான இலக்கிய வாசகர்கள் காட்சி இன்பம் கருதி தளபதி படத்தை சத்தம் இல்லாமல் பார்த்து விட்டு வந்ததாக குமுதம்  வாசகர்கள் கிசு,கிசுத்தார்கள். 
 
இருந்தாலும் "மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல. அல்ல. அல்ல."- என  எட்டுத் திசையும் எதிரொலித்த குணா படத்தை நம்ம தமிழ் நாட்டு மக்கள் ஓடிப் போய் தூக்கிப் பிடித்தார்கள். 

இந்த இரண்டு படங்களும் இரண்டு விதமான நிறங்களில் உயிர்பிக்கப் பட்டிருந்தது. 

தளபதி ஐரோப்பியத் தன்மை கொண்ட செந்நிறத்திலும், குணா படம் அமெரிக்க நாடுகளின் பகல் நேரத்து நீல வானம் போல பளிச் எனவும் காணப்பட்டது. இந்த இரண்டு படங்களும் இதே நவம்பர் 5- ஆம் தேதி -1991- ஆம் ஆண்டு வெளியானது. 
அது ஒரு மறக்க முடியாத சென்னைக் காலம். 

@ வண்ணப்பலகை மின்னிதழ்
( 05, நவம்பர், 2023 )


Comment As:

Comment (0)