
இதைச் சாப்பிடுங்க பாஸ்
சுவையான சுவரொட்டி
- By --
- Saturday, 04 Jan, 2025
மட்டன் மண்ணீரலை சுவரொட்டி என்பார்கள். இது பச்சையாக இருக்கும்போது சுவரில் ஒட்டிக்கொள்வதால், இப்படி பெயர் வந்ததாக சொல்வார்கள். மட்டன் மண்ணீரலில், அமினோ அமிலங்கள், B12, இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கக்கூடிய இந்த சுவரொட்டியை வளரும் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து தரலாம்.. சிறுநீரக தொற்றை விரட்டக்கூடிய தன்மை ஆட்டு மண்ணீரலுக்கு உண்டு.. அதேபோல, முடக்குவாதம், கல்லீரல் பாதிப்பு உடையவர்களுக்கும் இந்த மண்ணீரல் மருந்தாகிறது. வாய்ப்புண், வயிற்றுப்புண்களால் அவதிப்படுபவர்கள், உப்பு சேர்க்காமல் இந்த சுவரொட்டியில் சூப் செய்து குடிக்கும்போது, நிவாரணம் கிடைக்கும்.
மண்ணீரல்: மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் மற்றும் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டன் மண்ணீரல் ஒரு அற்புத உணவாகும். காரணம், 50 கிராம் மண்ணீரலில், ஒரு நாளைக்கு நமக்கு தேவையான இரும்புச்சத்துக்கள் இருக்கிறதாம். அந்தவகையில், ரத்தசோகையை தீர்ப்பதுடன், புதிய ரத்தத்தை விருத்தி செய்யக்கூடிய தன்மை இந்த மண்ணீரலுக்கு உண்டு. இதனால் ரத்த எண்ணிக்கையும் மெல்ல அதிகரிக்கும்.. சுவரொட்டியில் 215% இரும்புச்சத்து உள்ளதால், நமக்கு தினசரி தேவையைவிட 2 மடங்கு இரும்புச்சத்தினை, வெறும் 100 கிராம் சுவரொட்டியிலிருந்தே பெற முடியும். கர்ப்பிணிகளுக்கு இந்த மண்ணீரல் மிகவும் நல்லது.. இரும்புச்சத்து மற்றும் குழந்தையின் வளர்ச்சிக்கும் இது மிகவும் உதவும்..
ரத்த சிவப்பணுக்கள்: மண்ணீரலில் வைட்டமின் B9, B2 அதிமாக உள்ளது. போலிக் ஆசிட் என்று அறியப்படும் வைட்டமின் B9, ரத்த சிவப்பணுக்களை உருவாக்க தூண்டுகிறது. இது குழந்தையின் மூளை மற்றும் முதுகுத்தண்டில் ஏற்படும் பிறவி குறைபாடுகளை தடுக்கிறது. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை உருவாக்குவதில் வைட்டமின் B12 முக்கிய பங்கு வகிக்கிறது.
அதுமட்டுமல்ல, நம்முடைய உடலில் திசுக்களை உருவாக்கவும், அவைகளை சீரமைக்கவும் புரதம் நமக்கு மிகவும் முக்கியம். அதிலும் கர்ப்பிணிகளுக்கு, புரதம் மிகவும் முக்கியமான ஒரு ஊட்டச்சத்தாகும். குழந்தையின் திசுக்கள், செல்கள் மற்றும் உறுப்புகளின் நல்ல வளர்ச்சிக்கு புரதம் அவசியமானதாக உள்ளது. அந்தவகையில், சுவரொட்டியிலுள்ள புரதம் "கை" கொடுத்து உதவுகிறது.
புரதத்தேவை:
குறிப்பிட்ட அளவில் மண்ணீரலை சாப்பிட்டு வருவது, நம்முடைய உடலின் புரத தேவையில் 53 சதவீதத்தை பூர்த்தி செய்கிறதாம். அதேபோல பெருங்குடல் அழற்சிக்கு ஆட்டு சுவரொட்டி சிறந்த மருந்தாக உபயோகப்படுகிறது.
மட்டன் வாங்கும்போதே சுவரொட்டியை கேட்டு வாங்கலாம். இதன் வெளிப்புறத்தில், வெள்ளையாக உள்ள தோலை நீக்கிவிட்டு சமைக்க வேண்டும். முக்கியமாக மண்ணீரலை மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக சுத்தமாக கழுவி சமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொற்று பாதிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல, எண்ணெய், மசாலா அதிகம் சேர்த்து வறுவல், பொரியல் செய்வதைவிட, சுவரொட்டியை நெருப்பில் வாட்டி சாப்பிட்டாலோ அல்லது சூப் வைத்து சாப்பிடும்போதோ அதிலுள்ள முழு சத்துக்களையும் வீணாக்காமல் பெற முடியும்.
கொலஸ்ட்ரால்: ஏராளமான சத்துக்களும் பயன்களும் அதிகமாக இருந்தாலும், இந்த மண்ணீரலில் கொலஸ்ட்ரால் அளவும் அதிகமாக உள்ளது. அதனால் சர்க்கரை நோய், சிறுநீரகம், இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் கட்டாயமாக மருத்துவர் ஆலோசனையின்றி சுவரொட்டியை சாப்பிடக்கூடாது.
தகவல் சேகரிப்பு :
வண்ணப்பலகை டீம்