1000933150

உள் காயம் பற்றிய விழிப்புணர்வு தேவை.

வயிற்று வலிக்கு அசைவ உணவு மட்டுமே காரணமல்ல...

சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் இறந்ததாகக் கூறப்பட்ட சிறுமியின் 
பிரேதப் பரிசோதனை முடிவுகள் 
- முற்றிலும் மாறுபட்டு இருந்தது. 

இறப்பிற்கான காரணமாக 
"காயத்தால் ஏற்பட்ட உதரவிதானக் கிழிவு" என்று தெரியவருகிறது. 

கோயம்புத்தூரைச் சேர்ந்த 
15 வயது நிரம்பிய பத்தாம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர், பள்ளிகள் அளவிலான  கூடைப்பந்தாட்ட போட்டிகளில் பங்குபெற மத்திய பிரதேசத்திற்கு தொடர் வண்டி மூலம் பயணம் செய்து சில நாட்கள் குவாலியரில் தங்கி போட்டிகளில் விளையாடி விட்டு 

நவம்பர் 15ஆம் தேதி
ரெயில் எண் - 12616 மூலம் 
குவாலியரில் இருந்து சென்னை நோக்கி தனது தோழமைகளுடன் பயணத்தைத் துவங்கி  சென்னை வந்தடைந்தார். 

இதற்கிடைப்பட்ட பயணத்தில் 
வலைதளம் மூலம் தொடர் வண்டி நிலையத்துக்கே வந்து நேரடியாக உணவுப் பொருட்களைத் தரும் நிறுவனம் மூலம் 

சிக்கன் ரைஸ் 
பீட்சா
பர்கர் 
ஆகியவற்றை தோழியர் சேர்ந்து சாப்பாட்டிருக்கின்றனர். 

பலரும் சேர்ந்து சாப்பிட்ட இடத்தில் இவருக்கு மட்டும் 
கடும் வயிற்று வலி
வாந்தி 
தலைசுற்றல் ஏற்பட்டிருக்கிறது. 

அவசர மருத்துவ உதவி எண் 139 க்கு அழைத்ததும் பல்ஹர்ஷா தொடர் வண்டி நிலையத்தில் மருத்துவர் இவரைப் பரிசோதித்து விட்டு 
பயணத்தை இடைநிறுத்தி மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேரப் பணித்திருக்கிறார்.
ஆயினும் முதலுதவி போதும் என்று நோயர் கருதி தனது பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார்.

சென்னை வந்திறங்கியவுடன் 
தனது உறவினர் உதவியுடன் 
அண்ணா நகர் பகுதியில் உள்ள 
தனியார் மருத்துவமனை ஒன்றில் 
சிகிச்சை எடுத்திருக்கிறார். 

பிறகு பெரம்பூரில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தவருக்கு திடீரென தீவிரமான வயிற்று வலி ஏற்பட்டு நிலை குலைந்து மயக்கமுற்றிருக்கிறார். 

உடனே விரைந்து அவரை மீட்டு பெரம்பூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதில் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதை உறுதி செய்தனர். 

சிறு வயதில் அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் 
அன்னாரின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக. 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் அவர் 
சிக்கன் ஃப்ரைடு ரைஸ் சாப்பிட்டதால் இறந்தார்? என்று ஒரு பக்கமும் 
ஐஆர்சிடிசி ரெயில்வே உணவில் ஏதோ பிரச்சனை ? என்று மறுபக்கமும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. 

இதற்கு ரயில்வே நிர்வாகம் தானாக முன்வந்து தங்களிடம் இருந்து எந்த உணவும் இறந்த நபரால் வாங்கி உண்ணப்படவில்லை என்று விளக்கம் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் இறந்த சகோதரியின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 
அவரது உடலில் வயிற்றுப் பகுதிக்கும் 
நெஞ்சுப்பகுதிக்கும் இடையில் இருக்கும் உதரவிதானம் எனும் தசைபகுதியில் கிழிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 

உதரவிதானம் என்பதற்கு மருத்துவ மொழியில் "டயாஃப்ராம்" என்று பெயர். 

இது நமது உடலின் வயிற்றுப் பகுதி உறுப்புகளான கல்லீரல் ,இரைப்பை , மண்ணீரல், சிறு குடல், பெருங்குடல் ஆகியவற்றை 
 
நெஞ்சுப் பகுதியில் உள்ள உறுப்புகளான நுரையீரல்கள் மற்றும் இதயத்தில் இருந்து பிரிக்கும் "கூரை" போன்ற தசை அமைப்பாகும். 

பொதுவாக நேரடியாக கூர்மையான ஆயுதங்கள் அல்லது கூர்மையான பொருட்கள் வயிற்றுப் பகுதியில் அல்லது நெஞ்சுப் பகுதியில் குத்தும் படி அடிபட்டால் உதரவிதானம் கிழியும்

இவையன்றி விளையாட்டின் போதும் 
வாகன விபத்துகளின் போதும் மழங்கிய காயங்களும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 
இதில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் 
உதரவிதானக் கிழிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

பெரும்பாலும் இவ்வகை கிழிவு 
இடது பக்கம் நடக்கவும் 
அதிலும் இடது பின் பக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகம். 

இவ்வாறு உதரவிதானத்தில் கிழிவு ஏற்பட்டாலும் அது உடனே வெளியே தெரியாமல் சில நாட்கள் முதல் சில மாதங்கள் வரை காத்திருந்து பிறகு வெளிப்படும் வாய்ப்பும் உள்ளது. 

அந்தக் கிழிசல் வழியாக, 
வயிற்றுப் பகுதியில் இருக்கும் 
மண்ணீரல், குடல் போன்றவை நெஞ்சுப்பகுதிக்குச் சென்று 
நுரையீரலை அழுத்துவதால்
மூச்சுத் திணறல் ஏற்படும். 

இரைப்பையானது அந்த கிழிசல் வழியாக மேலேறினால் வாந்தி 
போன்றவை ஏற்படும். 

அதீத வயிற்று வலி ஏற்படும். 

இந்த நிலையை கவனிக்காமல் தாமதித்தால் அந்த ஓட்டைக்குள் சிக்கிக் கொண்ட குடல் உள்ளிட்ட பாகங்களின் ரத்த ஓட்டம் சீர்கெட்டு அவை அழுகிப் போகவும் 
பிறகு உயிரைப் பறிக்கும் கொடுந்தொற்று நிலையாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது. 

சகோதரிக்கும் அவர் கூடைப்பந்து போட்டிகளில் விளையாடும் போது ஏற்பட்ட மழுங்கிய காயத்தால் 
உதரவிதானம் கிழிந்து அதிலிருந்து வெளியே தெரியாமல் 
உள்ளேயே உதிரப்போக்கும் இருந்திருக்கும். கூடவே வயிற்றுப் பகுதி உறுப்புகள் நுரையீரலை அழுத்தி மூச்சுத் திணறலை ஏற்படுத்தி இருக்கக்கூடும் 
இதன் விளைவாக மரணம் சம்பவித்திருக்கலாம். 

இந்நிகழ்வு மூலம் நாம் பெறும் பாடம் 

"வயிற்று வலி"
"வாந்தி" என்றாலே 
அது சிக்கன் ரைஸ் அல்லது ஏதேனும் அசைவ உணவால் ஏற்பட்ட தொற்று என்று மட்டும் குறுகிய கண்ணோட்டத்துடன் காணாமல் 
நமது கண்ணோட்டத்தை விரிவாக வைக்க வேண்டும். 

சமீபத்தில் காயம் ஏற்பட்டவர் / தீவிரமாக உடற்பயிற்சி / விளையாட்டுகளில் ஈடுபட்டவர் 
கடும் வயிற்று வலி + வாந்தி + மூச்சுத் திணறல் என்று  கூறினால் 
உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெற அழைத்துச் செல்ல வேண்டும் 

அது உதரவிதானக் கிழிவாக இருக்கலாம். 
உடனடியாக கண்டறிந்தால் முறையான அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும். 

நன்றி 

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 
பொது நல மருத்துவர் 
சிவகங்கை


Comment As:

Comment (0)