
சுய உந்துதுலின் தேவை
ஜரிகை மேகங்கள்
- By --
- Tuesday, 05 Nov, 2024
மனிதன் பாராட்டுக்கு ஏங்குபவனாய்,
நம்மை பிறர் மதிக்க வேண்டும் என்று நினைப்பவனாய்
இருக்கிறான்.
உண்மையில் இந்த பாராட்டு , மதிப்பு அனைத்தும் வானத்தில் மிதக்கும் முகில் கூட்டங்கள் போலத்தான்.
தரையில் நின்று பார்ப்பவனுக்கு
முகில் கூட்டங்கள் தான் வானம்
விமானத்தில் பறப்பவனுக்கு முகில் கூட்டங்கள் தான் தரை.
விண்வெளியில் இருப்பவனுக்கு இந்த பூமியே தரையாகிவிடுகிறது.
நாம் எந்தத் தரையில் இருக்கிறோம் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.
நாம் செய்யும் காரியங்கள் அது செயற்கரிய நற்காரியமாக இருப்பினும் சரியே.
அரிதினும் அரிதாக வெளிப்பட்ட திறமையின் வெளிப்பாடாகவோ இருக்கலாம்.
ஆனால் அதற்காக நம் சமூகம் எப்போதும் நம்மை பாராட்ட வேண்டும்.
ஊக்குவிக்க வேண்டும் என்று எண்ணுவது என்பது தினம் தினம் தரையில் நின்று கொண்டு வானில் ஒரே போன்று மேகக்கூட்டங்கள் வர வேண்டும் என்று நினைப்பதற்கு ஒப்பானதாகும்.
உண்மையில் , நாம் ஊக்கங்களுக்கும் நகாசு வார்த்தைகளுக்கும் முகஸ்துதிக்கும் எளிதில் அடிமையாகி விடுகிறோம்.
நம் மூளையின் தன்மை அப்படி
நம் மூளையின் எந்தப்பகுதியில்
அபின் , ஹெராயின் , கஞ்சா, ஆல்கஹால் , நிகோடின் சென்று வேலை செய்கிறதோ ?
அதே இடத்தில் தான் ஊக்கங்களும்
முகஸ்துதியும் வேலை செய்கிறது.
சிலருக்கு தன் சுய அழகு குறித்த ஊக்கங்கள் தேவைப்படுகின்றன
சிலருக்கு தன் சுய அறிவு குறித்த ஊக்கங்கள் தேவைப்படுகின்றன
சிலருக்கு தன் சம்பாத்தியம்
சிலருக்கு தன் குடும்பம்
என்று தொடர்ந்து ஊக்கம் தேவைப்படுகிறது.
ஓரளவுக்கு மேல் கிடைக்கும் போது
ஊக்கத்தையும் முகஸ்துதியையும் வேறுபடுத்திப் பார்க்கும் இயல்பை மூளை இழக்கிறது.
நான் உணர்வது யாதெனில்
முகில் கூட்டங்கள் மழை பொழிவது என்பது
மீண்டும் தான் பொழிந்த நீரை ஆவியாக்கி மண் தரும் என்ற நம்பிக்கையில் தான்
அது போல
முகஸ்துதி பாடும் மக்கள் அனைவரும் எதையும் எதிர்பார்க்காமல் நம்மை துதி பாடுவதில்லை.
எனினும் மெய்யான ஊக்கம் தரும் வார்த்தைகளை அளவோடு வழங்கும் போது அதை எதிர்கொள்வதில் மூளைக்கு பிரச்சனை இருப்பதில்லை.
பத்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவனைக் கூட உலகத்தையே வாங்கி விட்டதாக நினைக்க வைப்பது எது?
பத்து பேர் பின் தொடர்ந்தாலே தான் பெரும் தலைவர் என்று நினைக்க வைப்பது எது?
பத்து பேருக்கு நல்லது செய்து விட்டதாலேயே தான் பெரிய சமூக சேவகர் என்று நம்மை நாமே நினைக்கத்தூண்டுவது எது?
பத்து பேர் நம் பேச்சைக் கேட்கிறார்கள் என்பதற்காக நாம் மிகப்பெரிய சிந்தனாவாதி என்று நினைக்கத்தூண்டுவது எது?
நான் முன்சொன்ன "முகஸ்துதி" மட்டுமே.
நம் அடிமனதின் ஆளத்தில்
மூளையின் மடிப்புகளின் ஆளத்தில்
நாம் யார்? என்பது பதியப்பட்டிருக்கும்.
அந்த நாம் யார்? என்ற பிம்பத்தை அழித்து பூதாகரமாக்கி காட்டுவது இந்த செயற்கை ஊக்கம் எனும் முகஸ்துதி
சரி அப்போது ஊக்கமே இருக்கக்கூடாதா?
இருக்கலாம்
கண்டிப்பாக இருக்க வேண்டும்.
ஆனால் அந்த ஊக்கம் பெரும்பாலும் நமக்கு உள்ளிருந்தே வருவது நல்லது.
அது தான் நிலையானது.
உள்ளிருந்து வரும் ஊக்கமானது
நமது பலம் பலகீனத்தை அறிந்து ஒரு காரியத்தை செய்ய உந்தும்.
அதற்கு முகஸ்துதி தெரியாது.
எங்கு முன் செல்ல வேண்டும்?
எங்கு பின் வாங்க வேண்டும்?
எங்கு பதுங்க வேண்டும்?
எங்கு பாய வேண்டும்?
என்று அதற்குத் தெரியும்.
மேலும் அது நாம் செய்யும் விசயங்களில் சமூகத்தின் கருத்துகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்காது.
சமூகத்தின் ஊக்கத்தையும் மீறி சுய ஊக்கம் மூலம் நாம் செய்ய விரும்பிய காரியங்களை செய்யும் போது
நமது மனம் தேவையற்ற சஞ்சலப்படுவதை தவிர்க்க முடியும்
அந்த சுய ஊக்கம் மட்டுமே நிலையானது.
செயற்கை நிறமூட்டிகள்
செய்ற்கை சுவைகூட்டிகள்
உணவுக்கு எத்தனை ஆபத்தோ
அதை விட ஆபத்தானவை
நம் வாழ்க்கைக்கு செயற்கை ஊக்கங்கள்
முகஸ்துதியை வெறுப்போம்..
உள்ளிருந்தே வெளிப்படும் ஊக்கத்தை மேம்படுத்துவோம்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை