1000954303

பாதுகாப்பு அரண்.

சோவியத் ரஷ்யாவை விஞ்சிய இந்திய அரசியலமைப்புச் சட்டம்

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி முற்றிலும் புதிய கோணத்தில் எழுதப்பட்ட கட்டுரைக்கு நல்ல வரவேற்பு இருந்தது.  பதிவைப் படித்த ஒரு சில நண்பர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள என்ன வழி? என கேள்வி எழுப்பினார்கள். 

நல்ல கேள்வி. இந்தக் கேள்வியைத் தான் நாம் எதிர் பார்க்கிறோம். ஆனால், வெறுமனே சட்டங்களை மட்டும் தெரிந்து கொள்வதை விட, நெகிழ்வுத் தன்மை மிக்க அரசியல் அமைப்புச் சட்டங்கள் உருவானதற்கான சமூகக் காரணிகளை முதலில் தெரிந்து கொள்வது நல்லது. இதன் மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆழத்தையும், அவசியத்தையும் நம்மால் எளிதில் உணர முடியும். 

கி.பி. 1917- ஆம் ஆண்டில் நடைபெற்ற சோவியத் புரட்சிதான் இந்தியாவின் விடுதலைப் போராட்டத்திற்கு மிகப் பெரிய தூண்டுதலாக அமைந்தது. புரட்சிக்குப் பிறகு அமைந்த சோவியத் ரஷ்யாவின் கம்யூனிஸ ஆட்சியும் இந்தியாவின் சுயராஜ்ய கோரிக்கைக்கு தூண்டுதலாக இருந்தது. 

சோவியத் ரஷ்யாவின் புதிய அரசும் அதன் அடுத்தடுத்த வளர்ச்சிகளும் பொதுவுடமை சிந்தனையாளர்களிடம் ஒரு நம்பிக்கை ஒளியை பாய்ச்சியது. அதனைத் தொடர்ந்து  இந்திய துணைக் கண்டத்திலும் பொதுவுடமைக் கொள்கைகள் பரவத் தொடங்கியது. போலவே, கம்யூனிஸ்ட் கட்சி இந்த மண்ணில் வேர் ஊன்றியது. 

அதே வேளையில், தமிழ் நாட்டில் தமிழ் தென்றல் திரு.வி.க என்ற தமிழ்  சான்றோரும், சிங்கார வேலர் என்ற சமூக பொதுவுடமைக் கட்சி தலைவரும் இணைந்து இந்தியாவின் முதல் தொழிற் சங்கத்தை சென்னை - பட்டாளத்தில் நிறுவினார்கள். இதன் பயனாக இந்திய விடுதலைப் போரில் சமூக விடுதலையும் இணைந்து கொண்டது.  

1920- களில் காந்தியின் அரசியல் வருகை, 1929-ல் நேருவின் அரசியல் வருகை, இப்படி அடுத்தடுத்து வந்த தலைவர்களால் இந்திய விடுதலைப் போராட்ட வடிவம் சுயராஜ்ஜியம் என்ற அடுத்த நிலைக்கு உயர்ந்தது.  

இதனை அடுத்து இந்திய மக்களை இந்தியர்களே ஆள வேண்டும் என்ற கோஷங்கள் எழுந்தன. எனவே, அன்றைய பிரிட்டிஷ் இந்திய அரசு, இந்திய மக்கள்  தேர்தலில் பங்கு பெறும் உரிமையையும், வாக்களிக்கும் உரிமையையும் கொடுத்தது.  

இப்படி அடிமைத் தளையில் இருந்து அரசியல் விடுதலை, சமூக விடுதலை, சுயராஜ்யம் - என கடந்து வந்து சுயநிர்ணயம் என்ற இடத்தை வந்தடைந்தது. இதனால், பிரத்யேகமான அரசியல் அமைப்புச் சட்டம் என்றதொரு புதிய வெளியை நோக்கி இந்திய அரசியல் நகரத் தொடங்கியது. 

அதே காலக் கட்டத்தில் தொடங்கிய இரண்டாம் உலகப் போர் (1939- 45) உலக அளவில் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிகோலியது போலவே, உலக நாடுகள் பற்றிய அறிமுகத்தை இந்திய மக்களிடையே உருவாக்கியது. இந்த சூழலில், இந்தியத் தலைவர்களின் பொறுப்புகள் கூடின. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு உருவாகும் புதிய அரசுகளை எப்படி வடிவமைப்பது ? அதற்கான கொள்கை முடிவுகள் எப்படி இருக்க வேண்டும் ? பாட்டாளி வர்க்க சுதந்திரம் என்ற பெயரில் உருவான சோவியத் ரஷ்யாவில் நடந்து கொண்டிருக்கும் 25- ஆண்டு கால ஆட்சியில் மக்களுடைய பங்களிப்பு ஏதும் இல்லாமல் போன நிலையில், சுதந்திர இந்தியாவில் இந்திய பிரஜையின் வரலாற்றுப் பாத்திரம் என்னவாக இருக்க வேண்டும் ? என்ற கேள்வி எழுந்தது.

அப்போது மகாத்மா காந்தி கிராம சுயராஜ்யம் என்ற கருத்தை முன் வைத்தார். ஜவஹர்லால் நேரு, டாக்டர் அம்பேத்கார், அபுல் கலாம் ஆஸாத் உள்ளிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்கள் ஐரோப்பிய ஜனநாயக குடியரசை முன் வைத்தார்கள். அதற்கு எதிர் திசையில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் எவ்விதமான பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்திய வலதுசாரிகள், வரப் போகும் சுதந்திர இந்தியாவின் கால்களில் மீண்டும் ஒரு சனாதான விலங்கை மாட்டி விடக் காத்திருந்தார்கள். 

இந்த வலதுசாரிகளின் பலத்த எதிர்ப்புகளையும் மீறித்தான் இங்கே நமக்கே நமக்காய்  மிகப் பெரிய பாதுகாப்பு அரண் ஒன்றை உருவாக்கினார்கள். 

அந்த அரணுக்குப் பெயர் தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். ஆனால், இந்தியவுக்கு என எழுதப்பட்ட புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு, இந்தியாவின் தேசப்பிதா என அழைக்கப்பட்ட காந்தியடிகளின் கிராம சுயராஜ்யம் என்ற சுதேசிய கொள்கையை வகை மாதிரியாக ஏற்கவில்லை. மாறாக, 200 ஆண்டுகளாக நம்மை அடக்கி ஆண்டு கொண்டிருந்த ஐரோப்பியர்களின் சட்டங்களை வகை மாதிரியாக எடுத்துக் கொண்டோம். 

அட... ஏன் இத்தனை பெரிய முரண்பாடு என்கிறீர்களா? 

அதற்கான விடைகளோடு அடுத்த பதிவில் சந்திப்போம் ! 

வாழ்க இந்தியா ! 

வளர்க பன்முகத் தன்மை ! 

????  

*வண்ணப்பலகை* 
( 29, நவம்பர், 2024 ) 

????????????????????????????????????????????


Comment As:

Comment (0)