
காத்திருந்த படுகுழியும், கை தூக்கி விட்ட சட்டமும்
அரசியல் அமைப்புச் சட்டமும், புறவழிச் சாலையும்.
- By --
- Sunday, 01 Dec, 2024
"கிராம சுய ராஜ்யம்"- என்பதே அண்ணல் காந்தியடிகளின் ஆட்சி மன்ற வகை மாதிரி. இந்தியா போன்ற மக்கள் அடர்த்தியான வெப்ப மண்டல நாடுகளில் சுய பொருளாதார முறைகள் தான் பொருத்தமானது. அப்போதுதான், அந்தந்த பகுதிகளில் செரிவாக உள்ள மனித ஆற்றல்களை முழுமையாக பயன்படுத்த முடியும். அதன் மூலம் உள்ளூர் வேலை வாய்ப்புகள் பெருகும். அதன் வழியாக உள்ளூர் உற்பத்தியும், பொருளாதாரமும் வேகமான சுழற்சிக்கு வரும்.
இந்த வேகமான சுழற்சிதான் உள்ளூர் பொருளாதாரத்தை மிக வேகமாக வளர்ச்சி அடையச் செய்யும். இது தற்சார்பு பொருளாதாரத்தையும், தற்சார்பு அதிகாரத்தையும் கொண்டதாக அமையும். இந்த இந்தியத் தன்மையைத் தான் பாபுஜி விரும்பினார். தன்னுடைய அனைத்து ஆசிரமங்களிலும் அதனையே பாபுஜி செயல்படுத்தினார். விடுதலை அடையும் புதிய இந்தியாவிற்கான பொருளாதாரத்திற்கும், அதிகாரத்திற்கும் முன் மாதிரியாக முன் வைத்தார். அவருடைய அரசியல் வடிவமே இது போன்ற தற்சார்பு தத்துவத்தின் அடிப்படையில் தான் அமைந்திருந்தது.
பாபுஜியின் தத்துவம் மற்றும் அதன் உள் நோக்கம் எல்லாமே சரிதான். ஆனால், இந்த கிராம சுயராஜ்ய அமைப்பிற்குள் மறைந்திருக்கும் மிகப் பெரிய விபரீதத்தை நேரு உள்ளிட்ட ஜனநாயகவாதிகள்
துல்லியமாக உணர்ந்து விட்டார்கள்.
பாபுஜி தனது எல்லைக்குள் இருக்கும் ஆசிரமங்களில் இந்த தற்சார்பு முறையை வெற்றிகரமாக நிலை நாட்டி அதில் வெற்றியும் கண்டுள்ளார். ஆனால், இதே வகை மாதிரிகளை இந்திய முழுக்கவும் கொண்டு செல்லும் போது அதன் தன்மைகள் உடனடியாகவே நிறம் மாறத் தொடங்கி விடும். காரணம்....
இந்தியா என்பது கிராமங்கள் நிறைந்த நாடு மட்டுமல்ல. அதன் ஒவ்வொரு கிராமங்களிலும் வர்ண அடிப்படையிலான தொழில் அடுக்குகள் நிரம்பியுள்ள நாடு. அதில் ஆண்டாண்டு காலங்களாக அவரவர்க்கு விதிக்கப்பட்ட குலத் தொழில்களை மட்டுமே செய்து வருகிறார்கள். இதனால் கிராமங்கள் தோறும் கடும் சாதீய ஒடுக்கு முறைகள் வெளிப்படையாகவே அரங்கேறி வருகின்றன. இந்த வர்ணமயமான சனாதான சூழலில், சட்ட ரீதியலான ஆட்சியையும், அதிகாரத்தையும் கிராமிய அளவில் தருகின்ற போது, அது எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆகிவிடும். எனவே, இந்த வகையான அரசியலமைப்பு முறையை புறவழிச் சாலை வழியாக கடந்து சென்று, மேனாட்டு பாராளுமன்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை அன்றைய அரசியல் சுயநிர்ணய குழுத் தலைவர்கள் கையில் எடுத்தார்கள்.
இதற்காக தங்களுக்குள் தீவிரமாக விவாதித்தார்கள்.
இப்படி எல்லாம் தீவிர விவாதங்கள் ஏதுமின்றி, கிராம சுயராஜ்யம் தானே! என அன்றைக்கு நாம் அதனை ஏற்றுக் கொண்டிருந்தால்..... ?
இன்றைக்கு நம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கும்
"விஸ்வ கர்ம திட்டம்"- என்ற வர்ணாசிரம கல்வி, பொருளாதார, அதிகார முறைகள் அன்றைக்கே நம் நடு வீட்டிற்குள் வந்து சம்மணம் போட்டு அமர்ந்திருக்கும். ஆங்கிலேயன் காலத்தில் கிடைத்து வந்த கல்வியும், சுகாதாரமும், பொருளாதார சுதந்திரமும், பெயர் அளவுக்கான சுயராஜ்ய கூறுகளும் நமது கைகளில் இருந்து அன்றைக்கே பிடுங்கப்பட்டிருக்கும். இந்த 75 ஆண்டுகளில் நமது இந்திய தேசம் அப்படியே பின்னோக்கி கற் காலத்திற்கு சென்று இருக்கும்.
அப்படியான மிகப் பெரிய விபத்துக்களில் இருந்து நம்மை எல்லாம் அன்றைய அரசியல் சுய நிர்ணயக் குழுதான் காப்பாற்றியது. அப்படி ஒரு சுயநிர்ணயக் குழுவினை அமைத்த நேருவின் இடைக்கால அரசுதான் காப்பாற்றியது. அதில் இடம் பெற்றிருந்த அண்ணல் அம்பேத்கார் என்ற கூர்மையான சட்ட மேதையின் தீர்க்கமான வாதங்கள் தான் நம்மைக் காப்பாற்றியது. இப்படி ஒரு பாதுகாப்பான சட்டம் அமைந்ததற்கு அன்றைய இந்திய தேசிய காங்கிரசு கட்சியே மூலக் காரணம். எனவே, அன்றைய அரசியல் சுயநிர்ணயக் குழு என்னவெல்லாம் விவாதித்து இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது என்பதை நாம் வரலாற்றுத் தரவுகளின் வழியே நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நிகழ்கால அரசியல் களத்தில் நிற்பவர்களில் எத்தர்கள் யார் ? என்கிற கேள்விக்கு விடை கிடைக்கும்.
????
சுதந்திர இந்தியாவில் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப் பட வேண்டும் என்ற வகையில், மேலும் பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு பொது மனசாட்சியின் அடிப்படையில் ஒரு வலிமையான அதிகார மையத்தை உருவாக்கினார்கள். இந்தியாவிற்கான ஆளும் சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை அந்த மையத்தின் கைகளில் அளித்தார்கள். அது தான் இந்திய நாடாளுமன்றம்.
இந்தியர்களாகிய நாம், நமது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு நன்றி உடையவர்களாக இருப்போம். இந்த சட்டவரைவினை நமது உயிருக்கும் மேலாக காத்து நிற்போம்.
வாழ்க இந்திய ஜனநாயகம் !
????
*வண்ணப்பலகை*
(01, டிசம்பர், 2024)
????????????????????????????????????�????????