1000823497

நமது உரிமை, நமது அடையாளம்,

இந்தியர்களின் வேதப் புத்தகம் எது ?

நாம் ஏன் இதைத்  தெரிந்து கொள்ள வேண்டும் ?*  
 
"1947- ஆம் ஆண்டு நமது இந்தியத் திருநாடு சுதந்திரம் அடைந்தது"*- என நமது நாடு விடுதலை பெற்றதை ஒற்றை வரியில் கடந்து சென்று விடுகிறோம். அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில் இங்கே 
*"நடந்தது என்ன ?"* என்ற எவ்விதமான வரலாற்று அக்கறையும் நமக்கில்லை. ஆனால், இன்றைய மதவாத பாசிச சூழலில், அதனை எல்லாம் அக்கறையோடு தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விட்டது.  அந்த வகையில் 1947- க்கு பிறகான காலக் கட்டத்தை நான்கு வகையான காலக் கட்டங்களாக பிரித்து, நம் நினைவில் நிறுத்திக் கொள்வோம். இது நமது வரலாற்றுப் புரிதலை எளிதாக்கி விடும். 

அவை...... யாவன.

1947- ஆம் ஆண்டில் 
 *சுதந்திர இந்தியா*  

1948- ஆம் ஆண்டில் 
*சுய நிர்ணய இந்தியா* 

1950- ஆம் ஆண்டில் 
*குடியரசு இந்தியா* 

1952- ஆம் ஆண்டில் 
*ஜனநாயக இந்தியா* 
 
இதில், சுதந்திர இந்தியா பற்றி நமக்கு நிறைய சொல்லப்பட்டு விட்டது. எனவே, அடுத்துள்ள *சுயநிர்ணய இந்தியா* பற்றி தெரிந்து கொள்வோம்.  

1948- ஆம் ஆண்டு. அன்றைய நேருவின்  இடைக்கால அரசு நமது நாட்டிற்கு என ஒரு புதிய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்க வேண்டி, ஒன்பது பேர் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை அமைத்தது. அக்குழுவில் இடம் பெற்றிருந்த டாக்டர் அம்பேத்கார் அவர்கள் உலகில் உள்ள வளர்ந்த நாடுகளின் ஜனநாயக சட்டங்களை எல்லாம் கூர்ந்து ஆய்வு செய்தார். பிறகு அதில் உள்ள சிறப்பான அம்சங்களை இந்திய தன்மைகளுக்கு ஏற்ப சற்று மாற்றி அமைத்தார். 

அப்படி மாற்றி அமைத்த புதிய ஷரத்துக்களை சுயநிர்ணய குழுவில் உள்ள பிற உறுப்பினர்களோடு வைத்து விவாதித்தார். அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டது. பிறகு இந்தியாவில் உள்ள அனைத்து மாநில உரிமைகளையும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்புகளையும், மத்திய, மாநில அரசுகளின் கடமைகளையும் உள்ளடக்கிய - ஒரு புதிய  அரசியல் அமைப்புச்  சட்டம் உருவாக்கப்பட்டது. 

இதன் முடிவாக, 1949- ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம் தேதியன்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எனும் சுய நிர்ணயச் சட்டம் முழுமையாக எழுதி முடிக்கப் பட்டது. இதன் முடிவில்........

1950- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி் நமது இந்தியத் திருநாடு *குடியரசு இந்தியா* என தன்னைத் தானே அறிவித்துக் கொண்டது.

நிற்க.... 

நமக்கான தற்போதைய தேவை...

*சுயநிர்ணய இந்தியா* வின் காலக் கட்டத்திலிருந்து, *குடியரசு இந்தியா*- எனும் காலக் கட்டத்தை வந்தடைந்த அந்த இரண்டு ஆண்டுகளில் இங்கு *நடந்தது என்ன ?* என்ற அடியோட்டமான கேள்விக்கான பதில்கள் தான்.

குறிப்பாக, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதப்பட்ட அந்த இருபது மாத காலக் கட்டத்தில், இந்திய பாராளுமன்றத்தில் நடந்த விவாதங்கள். அதில், எந்த தரப்பினர் எதைப் பற்றி பேசினார்கள் ? இந்த நாட்டின் பன்முகத் தன்மையை காக்கப் பாடுபட்ட ஆளுமைகள் யார்? அந்த பன்முகத் தன்மைகளை முறித்து ஒரு மூலையில் எறிந்து விடத் துடித்த "நல்ல உள்ளங்கள் (!)" யார் ? இந்த இந்திய தேசத்தை அவர்கள் எப்படி கட்டமைக்க நினைத்தார்கள் ? அப்படியான விபத்துக்கள் ஏதும் நிகழ்ந்து விடாமல் இந்த தேசத்தை ஒரு மிகப் பெரிய ஜனநாயக மற்றும் சோஷலிஸ வெளியில் நிலை நிறுத்தியவர்கள் யார் ? அதற்கான முன்னெடுப்புகள் என்ன ? - இப்படி பல்வேறு கேள்விகளும் - அதற்கான பதில்களும் தான் நம்மை மிகச் சரியான திசை வழியில் முன்னெடுத்துச் செல்லும். மேலும், 
இது நமது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை புரிந்து கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.  

எல்லாம் சரி.... இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் ஏன் புரிந்து கொள்ள வேண்டும் ? அது சட்டம் படிப்பவர்கள் அல்லது அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கான வேலை அல்லவா? எனக்கு எதற்கு தேவையில்லாத வேலை ? - என்ற பலத்த குரல் நமக்குள் இருந்து எழுகிறது. இந்த இடத்தில் தான் நாம் ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். 

இந்திய நீதி மன்றச் சட்டங்கள் என்பது வேறு. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் என்பது வேறு. இதில் நீதிமன்றச் சட்டங்களை துறை சார்ந்தவர்களும் அதற்கான ஆர்வம் உள்ளவர்களும் தெரிந்து கொள்ளட்டும். ஆனால், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அல்லது அது எந்த அடிப்படையில் இயங்குகிறது ? என்ற அதன் இயங்கு தளத்தையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  

அதன் இயங்கு தளம் எது என்பதை ஓரிரு வரிகளில் கோடிட்டு காட்டி விட்டு இக் கட்டுரையை நிறைவு செய்கிறேன்.  

1) வேற்றுமையில் ஒற்றுமை. 

2) நம்மிடையே பேசப்படும் அனைத்து இந்திய மொழிகளையும், அதன் பண்பாட்டையும், அந்த இனங்களையும் பாதுகாப்பது. 

3) அனைத்து சமய மற்றும் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாப்பது.  

4) அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, கருத்துச் சுதந்திரம், ஊடக உரிமைகளை பாதுகாப்பது. 

5) மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்வதற்குரிய மக்களாட்சி முறையையும், அதற்கான தேர்தல் விதி முறைகளையும் உருவாக்குவது. அதனை பாதுகாப்பது.  

இப்படிப் பல்வேறு அடிப்படை ஜனநாயக அம்சங்களுடன் கூடிய இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நம்முடைய அன்றாட விவாதப் பொருளாக மாற்ற வேண்டும். அப்போது தான் இந்த இந்தியத் திரு நாடு என்பது இந்திய மக்களுக்கானது என்ற ஒற்றை உண்மை நமக்கு தெளிவாகப் புலப்படும். இப்படி எல்லாம் ஒரு ஜனநாயகத் தெளிவு வந்து விடக் கூடாது என்று தான் இங்குள்ள வலதுசாரி அமைப்புகள் இதன் ஆரம்ப காலந் தொட்டே வேலை செய்து வருகின்றன. அந்த வேலையில் அவர்கள் வெற்றியும் கண்டு வருகிறார்கள்.  

இதுவரை நடந்தவற்றை எல்லாம் ஒரு ஓரமாக எடுத்து வைத்து விட்டு சற்று வெளியே வாருங்கள். நமக்காக காத்துக் கொண்டிருக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி சற்று தெளிவாகத்  தெரிந்து கொள்வோம். இன்றைய சமகால அரசியல் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் யாவும் இதில் தான் அடங்கியுள்ளது.  

அப்போது தான் 
*குடியரசு இந்தியா* என்றால் என்ன ? என்ற புரிதல் நமக்கு வரும். 

இதனை அடுத்து 
 *ஜனநாயக இந்தியா*- என்றால் என்ன ? என்பது நமக்குத் தானாகவே தெரிந்து விடும்.   

இன்று நவம்பர் 26- ஆம் தேதி. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதி முடிக்கப்பட்ட நாள். 
( 26-11-1949). வெற்றிகரமான 75 ஆம் ஆண்டு நிறைவு பெறுகிறது. 

*வாழ்க இந்தியா!* 

*வளர்க மக்களாட்சி !!* 

???? 

*வண்ணப்பலகை* 
(26, நவம்பர், 2024)  

????????‍♂️????????‍♂️????????‍♂️????????‍♂️????????‍♂️????


Comment As:

Comment (0)