1000930126

சூழலில் உருவான வாரிசு அரசியல்

இந்திரா எனும் இரும்புப் பெண்மணி

இந்தியாவின் இரும்புப் பெண்மணி 
இந்திரா காந்தி

ஒரு நாட்டின் ஆட்சி, அதிகாரங்களை தலைமையேற்று நடத்திச் செல்ல , சில அடிப்படைத் தகுதிகள் அவசியம் தேவைப்படுகிறது. 

அந்த அடிப்படையான சூழல்களோடும, தன்மைகளோடும் வளர்க்கப்பட்டவர் தான் சிறுமி "இந்திரா பிரியதர்ஷினி"

தனது தந்தை நேருவின் சுதந்திரப் போராட்ட சிறைவாசங்கள், அதனால் அந்த குடும்பத்தில் நிகழ்ந்த அரசியல் உரையாடல்கள் என இந்திராவின் இளமைப் பருவம் முழுதும் அரசியல்மயமான சிந்தனைகளுடனே கட்டமைக்கப்பட்டது. 

பின்பு, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அவருடைய இல்லமானது, பிரதம அமைச்சரின் இல்லமாக மாறிப்போனது. 

முன்பு அரசியல் சொல்லாடல்கள் மட்டுமே நிகழ்ந்து வந்த அந்த இல்லத்தில் இப்போது ஆட்சி, அதிகரங்களின் உரையாடல்களும், நடமாட்டங்களும் ஏற்படத் தொடங்கி விட்டன. 

கிட்டத்தட்ட, முப்பது மாநிலங்கள், பல்வேறு மொழிகள், பண்பாட்டுப் பின்னணிகள், வேவ்வேறு வகையான மக்களின் வெவ்வேறு தேவைகள் என ,அந்த பிரதம அமைச்சரின் இல்லமும், அலுவலகமும் பல பொறுப்புகளை சுமந்து நின்றது. 

அதன் அழுத்தங்களையும், நகர்வுகளையும், துரிதமான செயல்பாடுகளையும் கிட்ட இருந்தே கவனிக்கும் ஒரு அரிய வாய்ப்பினைப் பெற்ற இந்திரா பிரியதர்ஷினி என்ற இளம் பெண் , இயல்பாகவே ஒரு அரசியல் ஆளுமையாக மாறத் தொடங்கியிருந்தார். 

கால ஓட்டத்தில் தன் தந்தை வகித்த பதவிக்கு தானும் வருவோம் என எதிர் பார்க்காத இந்திரா காந்தி ஒரு நாள் இந்த நாட்டின் பிரதம மந்திரியாக பதவியேற்றார். 

அப்போது அவருக்கு முன் இருந்த பல அரசியல் சவால்களை எதிர் கொண்டவராய் தனது ஆட்சி அதிகாரப் பயணத்தைத் தொடர்ந்தார். 

இந்தியா என்ற ஒரு மிகப் பெரும் ஜனநாயக நாட்டின் தேவைகள் பல அடுக்குகளாக இருந்தது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பற்ற அடுக்குகளாக இருந்தன. 

பொருளாதார ரீதியில் பொதுவான தீர்வுகளை இங்கே வைக்க முடியாது எனத் தெரிந்து கொண்டார். ஆனால், இந்த ஏற்றத் தாழ்வான சமூக அமைப்பை ஒரு புள்ளியில் இணைக்கும் இடத்தை மிக லாவகமாக அவர் கண்டு பிடித்து விட்டார். 

அதுதான் வங்கித் துறை. 

மிகப் பெரும் குபேரனும் சரி, மிகச் சாதரணமான எளிய மனிதனும் சரி இந்த இரண்டு எதிர், எதிர் எல்லைகளும் வந்து போய் சந்திக்கும் ஒற்றைப் புள்ளி என்பது வங்கிகள் தான். 

எனவே, தனியார் வசம் இருந்த அனைத்து வங்கிகளையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்தினார். 
இதனால் தனியார் வங்கிகள் அனைத்தும் ஏற்கனவே உள்ள தேசிய வங்கிகளின் வரிசைக்கு வந்து விட்டன. இதனால் வங்கிச் சேவைகள் முன்பைக் காட்டிலும் பெரியதானது. சேவைகள் விரிவடையத் தொடங்கியது.

இப்போது, நகரங்களில் மட்டுமே கிளைகளை கொண்டிருந்த வங்கிகள் எல்லாம் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களை நோக்கிச் சென்றன. 

வங்கிகளின் பல் வேறு சேவைகள் எல்லாம் வேளாண்மைக்கும், சிறு தொழில்களுக்கும் பயன்படத் தொடங்கின. 

இதனால் ஒரு மிகப் பெரிய தற்சார்ப்பு பொருளாதார சுழற்சி ஏற்படத் தொடங்கியது. 
அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் நேரடியாக பலன் பெறத் தொடங்கினார்கள். 

அதன் நற் பலன்களை எல்லாம் இன்று வரை நாம் அனுபவித்து வருகிறோம். 

இந்த தொலை நோக்குத் திட்டத்திற்கு காரணம், அவருடைய தொலை நோக்குப் பார்வைதான்.

சமூகத்தின் தேவைகள் என்ன ? 

அதன்  வளர்ச்சிகள் எப்படி அமைய வேண்டும். ?

அடிப்படை வாழ்வாதாரத்தை எப்படி வளப்படுத்த முடியும்?

இப்படியாக, பட்டியலிடப்பட்ட பல கேள்விகளோடு ஆட்சிப் பீடத்தில் இருந்த அந்த அம்மையாரால் தான் ஒரு குறைந்த பட்ச பாதுகாப்பு உள்ள வாழ்க்கையை நமக்கு தர முடிந்தது. 

ஆனால், இன்றைய ஆட்சியாளர்களின் பிறப்பு என்ன ? 
வளர்ப்பு என்ன ? 
கொள்கை என்ன ? 
கோட்பாடு என்ன ? 
சிந்தனைகள் என்ன ? 
சித்தாந்தங்கள் என்ன ? 

என, நாம் கேள்விகளை வரிசையாக  அடுக்கிக் கொண்டே போனாலும்,  
 நமக்கு கிடைக்கப் போகும் விடைகள் வெறும் பூஜ்ஜியங்கள் மட்டும் தான். 

இந்த பூஜ்ஜியங்களிடம் , இந்த ராஜ்ஜியத்தை இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் விட்டு வைத்து வேடிக்கை பார்க்கப் போகிறோம் ?

தகுதியானவர்கள்
இந்த தரணியை ஆளட்டும் 


Comment As:

Comment (0)