
ஒரு நொடி யோசியுங்கள் !
பாதுகாப்பு விதிகள் - ஒரு கலை
- By --
- Monday, 18 Nov, 2024
நாம் ஏன் Safety ஐ வெறும் வார்த்தையாக பார்க்காமல், அதை உணர்ந்து கொள்வதும் மட்டுமின்றி, அதை ஒரு கலையாக, ஒரு Art ஆக பார்க்க வேண்டும்?
நாம் அனைவரும் பாதுகாப்பு விதிமுறைகளை, வழிமுறைகளை, நிம்மதியாக இருப்பதற்கு, காயமில்லாமல் இருப்பதற்கு பின்பற்றுகிறோம் என்ற நிலையில் இருக்கிறோம். சொல்லப்போனால் அந்த எண்ணம் கூட இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இன்னமும் வரவில்லை.
ஒருவேளை நாம் பாதுகாப்பு வழிமுறைகளை காயமில்லாமல் இருக்க பின்பற்றினால் அதுமட்டும் நமக்கு போதாது. Safety ஐ நாம் ஒரு கலையாக ரசிக்க வேண்டும். அதை சிறார்கள் மனதில் ஏற்றி வைக்க வேண்டும். அப்போதுதான் பெரியவர்களாக வளரும் போது பாதுகாப்பு உணர்வோடு இருப்பார்கள்.
வகுப்பறையில் ஃப்ரீ டைம் கிடைத்தால், இரண்டு நிமிடம் கிடைத்தால் கூட போதும், ஆசிரியர் இந்த ரவுண்டானா படத்தை போர்டில் வரையலாம். வரைந்து இப்படி சொல்லலாம்.
இப்ப மிஸ்டர் குமார் இருக்கார். அவருக்கு வயசு 32. நல்லா சம்பாதிக்கிறார்.
நல்ல ஆரோக்கியமா இருக்கார். அன்னைக்கு ஞாயிற்றுகிழமை காலை. உற்சாகமா எந்திருக்கிறார்.
காரணம் அன்னைக்கு பார்க் போறார்.
காலையில பார்க் போய் அங்க ஷட்டில் விளையாடுறது அவருக்கு ரொம்ப பிடிக்கும்.
நல்லா ஷட்டில் விளையாடிட்டு, பிறகு ப்ரெண்ஸோட டீ குடிப்பார். அரட்டையடிப்பார்.
அப்புறம் வீட்டுக்கு வந்து குளிச்சிட்டு உக்காந்தா காலையில சூடா இட்லியும் சிக்கன் குழம்பும் இருக்கும். அவரோட அம்மாவும் மனைவியும் அதை எல்லாம் செய்து கொடுத்திருவாங்க.
அதை குமார் நல்லா சாப்பிடுவார். சாப்பிட்டு டிவி பாப்பார். பசங்களோட அரட்டையடிப்பார்.
மதியம் ஆனா எலும்பு ரசமும், மட்டன் சுக்காவும் இருக்கும். அதை நல்லா சாப்பிடுவார். அப்புறம் சின்னதா ஒரு தூக்கம்.
சாயங்காலம் குடும்பத்தோட வெளிய ஷாப்பிங் அல்லது சினிமா போயிட்டு வீட்டுக்கு வந்து சிம்பிளா சாப்பிட்டு சந்தோசமா தூங்கிருவார்.
இப்படிப்பட்ட குமார் எந்திரிச்சி பார்க் போகுறதுக்கு பைக்ல போயிட்டே இருக்கார். ரவுண்டானா வருது. காலைல அஞ்சரை மணி. யாருமே இல்லை. ரவுண்டானாவுல அவரு இடது பக்கம் சுத்தி, வட்டத்தை சுத்திதான் போகனும். சரியா. அதுதான் ரூல்ஸ்.
ஆனா குமார் பாக்குறார். யாருமே இல்லை. சரி! இப்படி ரைட்ல திரும்பி அந்த ரோட்டை பிடிச்சிரலாம்னு ரூல்ஸை மீறி போறார். சரியா அப்போ சைக்கிள்ல ஒரு தம்பி பால் கேனை வைச்சிட்டு இடது பக்கம் திரும்ப வர, குமார் அந்த தம்பி மேல மோதுறார். இரண்டு பேருக்கும் கால்ல அடி. கீறல், சிராய்ப்பு.
பத்து நிமிசமா அங்க யாருமே வரல. அப்புறம் ஆள்கள் வந்து ரெண்டு பேரையும் தூக்கி ப்ளாட்ஃபார்ம்ல வைச்சி, ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போறாங்க. அங்க டாக்டர்ஸ் குமார் முட்டிக்கு கட்டு போட்டு அட்மிட் பண்றாங்க. குமார் வலியோட முட்டியை பிடிச்சிட்டு இருக்கும் போது அவருக்கு நினைப்பு வருது,
“ச்சே இன்னைக்கு மட்டும் அந்த ரவுண்டானாவ சுத்தி பைக்கை ரூல்ஸ் படி ஓட்டி இருந்தா, இதே சமயம் காலையில எட்டு மணிக்கு நல்லா சூடா இட்லியும், சிக்கன் குழம்பும் சாப்பிட்டிருக்கலாம்” அப்படி தோணுது.
இப்ப குமார் ரவுண்டானாவ சுத்தி போயிருந்தா எத்தனை விநாடி ஆகிருக்கும்? 10 விநாடி ஆகிருக்கும்.
குறுக்கே போனா எத்தனை விநாடி ஆகி இருக்கும்? 4 விநாடி ஆகி இருக்கும்.
அப்போ வெறும் ஆறே ஆறு விநாடியை மிச்சப்படுத்துறதுக்காக குமார் அவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து தன் சந்தோசத்தை கெடுத்துகிட்டது மட்டுமில்லாம, இன்னொரு பால் சேல்ஸ் பண்ற பையன் சந்தோசத்தையும் கெடுத்துகிறார்.
நீங்களும் வாழ்க்கையில இது போல சிச்சுவேசன் வரும் போது இது மாதிரி யோசிக்கலாம்.
இப்படி சேஃப்டியா யோசிச்சா உங்களுக்கு என்ன கிடைக்குது? சந்தோசம் கிடைக்குது.
இன்றைய பேப்பரில் படிக்க கிடைத்த செய்திகள்.
1. மங்களூர் அருகே உள்ள ரிசார்டுக்கு சென்று பி.ஈ ஃபைனல் இயர் படிக்கும் மூன்று மாணவிகள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பான நீச்சல் குள ஏரியாவை விட்டு, அங்குள்ள ஆழமான நீச்சல் குள பகுதிக்கு குளிக்க செல்லும் போது மூழ்கி இறந்திருக்கின்றனர்.
2. புத்திர கவுண்டம்பாளையத்தில் செல்போன் கேம் விளையாடிய படி ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த பிளஸ் ஒன் படிக்கும் மாணவர்கள் ரயிலில் அடிபட்டு பலி.
பி.ஈ படித்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு எப்படிப்பட்ட தரமான அறிவுநிலை, அறிவியல் பார்வை இருக்க வேண்டும்?
நாலடி உயர நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், பாதுகாப்பு கார்ட்ஸ் இல்லாத போது எட்டடி உயர நீச்சல் குளத்துக்கு செல்லும் போது,
“ ஒரு மனுசன் நீருக்குள் நினைவு இழக்க சரியா 45 விநாடி போதும். இன்னொரு 60 விநாடி அப்படி இருந்தா உயிர் போயிரும்” என்கிற எண்ணம் எப்படி இல்லாமல் போனது?
காரணம் இந்த மாணவிகளின், அந்த ரயிலில் அடிப்பட்ட மாணவனின் வாழ்க்கையில் வந்த,
பெற்றோர்கள்
சமூகம்
ஆசிரியர்கள்
பள்ளிக்கூடங்கள்
ஊடகங்கள்
நண்பர்கள்
உறவினர்கள்
என யாருமே Safety ஐ ஒரு Art ஆக சொல்லித்தரவில்லை. பாதுகாப்பை ஒரு கலையாக ரசிக்க கற்றுக் கொள்ளும் போதுதான் நாம் அதை பின்பற்றுவோம்.
இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் யோசிக்க வேண்டும்.
பாதுகாப்பு பற்றி நிறைய சுவாரஸ்யமாக உங்கள் பிள்ளைகளிடத்தும் மாணவர்களிடத்தும் அன்றாட வாழ்க்கை சம்பவங்களை காட்டி பேசுங்கள். உரையாடுங்கள்.
அது வருங்காலத்தில் எண்டர் ஆகும் இளைஞர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய நன்மையாகும்.
விஜய சங்கர் பாஸ்கர் ( ஜர்னலிஸ்ட் )